நாட்டையே உலுக்கிய சுரங்கப்பாதை விபத்து:
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதி உள்ளது. அங்கு சுமார் 4 ஆயிரத்து 500 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 12ம் தேதி அந்த சுரங்கப்பாதையில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அடுத்தடுத்து மண் சரிவு ஏற்பட்டதால் சுரங்கப்பாதை முழுமையாக மூடிக் கொண்டது.
அப்போது, சுரங்கப்பாதைக்குள் பணியில் இருந்த 41 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர். உள்ளே இருக்கும் தொழிலாளர்களுக்கு 6 இன்ச் குழாய் மூலம் உணவு, மருந்து என தேவையான பொருட்களை அனுப்பி வருகின்றனர். சாதாரண உணவுகளை சாப்பிட்டால், இயற்கை உபாதைகளை கழிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், மருத்துவர்கள் பரிதுரைக்கும் உணவுகள் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்க ரம்மி, லூடோ, செஸ் ஆகியவை குழாய் மூலம் அனுப்பப்பட்டன. இதோடு இல்லாமல், மன அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மீட்பு பணிகளில் தொய்வு:
சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் 14 நாட்களாக நடைபெற்று வருகிறது. சுரங்கத்தில் 57 மீட்டர் தூரத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதை கண்டறிந்த அதிகாரிகள் எளிதாக மீட்டுவிடலாம் என்று நினைத்தனர். ஆனால், மீட்புப் பணியில் ஒவ்வொரு நகர்வும் கடும் சவாலாக மாறியது. முதலில், ஆகர் இயந்திரத்தை கொண்டு வந்து துளையிட்டு கொண்டிருந்தனர்.
ஆனால், ஆகர் இயந்திரம் பொருத்தப்பட்ட கான்கீரிட் தளம் சேதமடைந்தது. முன்னதாக, ஆகர் இயந்திரம் துளையிடும்போது இரும்பு கம்பி குறுக்கிட்டதால் அதனை வெட்டுவதற்கு ஆறு மணி நேரம் ஆனது. சுரங்கப்பாதையில் அதிகளவு இரும்பு கம்பிகள் உள்ளதால், துளையிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று இரும்பு கம்பிகளை ஆகர் இயந்திரம் மூலம் வெட்டிக் கொண்டிருந்தபோது, ஆகர் இயந்திரம் பழுதடைந்தது. இதன் காரணமாக, கைகளால் துளையிடும் இயந்திரத்தை பயன்படுத்த துளையிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், நாளை மீட்புப்பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்பர்ட் சொல்வது என்ன?
இந்நிலையில், சுரங்கப்பாதை மீட்பு நடவடிக்கை குறித்து, சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் கூறுகையில், "மலைப் பகுதியில் நடைபெறும் மீட்புப் பணி என்பதால் இது மிகவும் சிக்கலானதாக உள்ளது. எப்போது நிறைவடையும் என உறுதிப்படச் சொல்ல முடியாது. கணிக்க முடியாது ’போர்' போன்ற சூழல்தான் இந்த மீட்புப் பணியில் நீடிக்கிறது. ஆகர் இயந்திரம் மூலம் தான் மீட்க முடியும் என்பது இல்லை. பல வழிகள் உள்ளன. ஆகர் இயந்திரம் பழுதடைந்துவிட்டது. இதனை சரி செய்ய முடியாது. முற்றிலுமாக பழுதாகிவிட்டது. இனி ஆகர் இயந்திரம் மூலம் மீட்புப் பணிகள் நடைபெறாது.
தொழிலாளர்களை மீட்க நீண்ட நாட்கள் ஆகலாம். ஒரு மாதம் கூட ஆகலாம். எவ்வளவு நாட்கள் ஆனாலும் 41 தொழிலாளர்களும் பத்திரமாக அவர்களது வீட்டிற்கு சென்றடைவார்கள். ஆனால், காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளில் ஒருபோதும் அவசரப்படக்கூடாது. எவ்வளவு நாட்கள் ஆனாலும், ஒரு விஷயத்தை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும். தொழிலாளர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்வார்கள்.
அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் வீட்டிற்கு பத்திரமாக செல்வார்கள் என்று நம்புகிறேன். மீட்பு பணி விரைவாக நடக்கும் என்று நான் ஒருபோதும் உறுதி அளிக்கவில்லை. இந்த பணி எளிதாக இருக்கும் என்று தான் சொன்னேன். அது நாளை என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. எனவே, சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்" என்றார்.