Tumakuru: பாறை இடுக்கினுள் சிக்கிய கல்லூரி மாணவி, 12 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.
செல்ஃபி மோகத்தால் வந்த ஆபத்து:
சமூக வலைதளங்களின் வளர்ச்சி ஒருபுறம் சாதகமானதாக கருதப்பட்டாலும், இளம்தலைமுறையினர் இடையே எதிர்மறையான தாக்கத்தை அதிகளவில் விதைத்துள்ளது. லைக்ஸ் மற்றும் புகழ் மோகத்தால், ஆபத்தான முறையில் ரீல்ஸ் மற்றும் செல்ஃபி எடுப்பது போன்ற பழக்க வழக்கங்கள் அதிகரித்துள்ளன. இதனால், உயிர்கள் பறிபோகும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. அந்த வரிசையில், கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம், மந்தரகிரி மலை அருகே உள்ள ஏரியின் நடுவே இருந்த பாறை மீது ஏறி நின்று, செல்ஃபி எடுத்துக்கொண்ட கல்லூரி மாணவி தடுமாறி விழுந்து பாறை இடுக்கினுள் சிக்கிக் கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், 12 மணி நேர மீட்பு பணிக்கு பின் அவரை பத்திரமாக மீட்டனர்.
நடந்தது என்ன?
குப்பி தாலுகாவில் உள்ள சிவராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பி டெக் மாணவி ஹம்சா (19), கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் மந்தாரகிரி மலை அருவியைப் பார்ப்பதற்காக பெங்களூருவைச் சேர்ந்த தனது தோழியுடன் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்றுள்ளார்.
அங்கு 30 அடி உயரமான பள்ளத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து, பாறை நிலப்பகுதி வழியாக பாய்ந்து மைதாலா ஏரியில் விழுகிறது. அதனை தோழியுடன் சேர்த்து பார்த்து ரசித்த ஹம்சா, மந்தாரகிரி மலையடிவாரத்தில் செல்ஃபி எடுக்கு முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறியதில் பள்ளத்தாக்கில் விழுந்து பாறைகளுக்கு இடையில் அவர் சிக்கிக் கொண்டார்.
அவள் பள்ளத்தாக்கில் விழுந்ததை கண்டதும், உடனிருந்த தோழி கத்தி கூச்சலிட்டுள்ளார். இதைகண்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு, உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களுடன் தீயணைப்பு மற்றும் அவசர சேவைப் பணியாளர்களும் சம்பவ இடத்துக்குச் விரைந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகளுக்கான திட்டங்களை வகுத்தனர். அதன்படி,
நீர்வீழ்ச்சியில் அதிகளவு தண்ணீர் வெளியேறியதால், அந்த நீர் பாறை இடுக்கில் விழாதப்படி மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. பின்னர் பாறை இடுக்கில் சிக்கிய ஹம்ஷாவை கயிறு கட்டி மேலே இழுத்தனர். விடிய விடிய இந்த பணிகளின் முடிவால், 12 மணி நேரத்திற்கு பிறகு அந்த கல்லூரி மாணவி பத்திரமாக மீட்கப்பட்டார். தற்போது அவர் தும்குரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காவல்துறை சொல்வது என்ன?
இதுகுறித்து தும்குரு காவல் கண்காணிப்பாளர் அசோக் கே.வி செய்தியாளர்களிடம் பேசியபோது, “ போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மணல் மூட்டைகளை போட்டு, தண்ணீரை திசை திருப்பி மீட்பு பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் கொட்டியதால் இரவு நேரத்தில் மாணவியை அடையாளம் காண முடியவில்லை. தண்ணீர் ஓட்டம் நின்ற பிறகு, பாறைகளுக்கு இடையில் ஹம்சா இருந்ததை காண முடிந்தது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. இப்போது அவள் மருத்துவமனையில் நிலையாக இருக்கிறார்" என்றார்.