US Trump Tariff: ப்ராண்டட் மட்டுமின்றி காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கும், புதிய 100 சதவிகித வரி பொருந்தும் என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மருந்துகளுக்கு 100% வரி:
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும், ப்ராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு இனி 100 சதவிகிதம் வரி வசூலிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள புதிய நடைமுறையானது, இந்திய மருந்து உற்பத்தியாளர்களை பாதிக்கும் என கூறப்படுகிறது. அறிவிப்பு தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அமெரிக்காவில் உற்பத்தி ஆலைகளை நிறுவாவிட்டால், நிறுவனங்களின் ப்ராண்டர் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளின் மீது வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 100 சதவிகிதம் வரி வசூலிக்கப்படும். பூமி பூஜை போடப்பட்டுள்ளது அல்லது கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்யும் நிறுவனங்களுக்கு இந்த வரி பொருந்தாது” என பதிவிட்டுள்ளார்.
வரிகளை குவிக்கும் ட்ரம்ப்
சிகிச்சைக்கான மருந்துகள் மட்டுமின்றி, சமையலறை அலமாரிகள் மற்றும் குளியலறை வேனிட்டிகளுக்கு 50 சதவிகிதமும், மெத்தை தளவாடங்களுக்கு 30 சதவிகிதமும், கனரக லாரிகளுக்கு 25 சதவிகிதமும் வரி விதித்துள்ளார். உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதிக்கும் அளவுக்கு அதிகமான இறக்குமதிகள் காரணமாக சமையலறை, குளியலறை மற்றும் சில தளபாடங்கள் மீதான புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.
கலக்கத்தில் அமெரிக்க மக்கள்:
மருந்துகளுக்கு 25 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை வரி விதிக்கும் ட்ரம்பின் முடிவு, கணிசமான அரசியல் ஆபத்தை ஏற்படுத்துகிறது. காரணம் இந்த அறிவிப்பால் வெளிநாடுகள் அமெரிக்காவிற்கு மருந்துகளை ஏற்றுமதி செய்வதிலிருந்து பின்வாங்கினால், அமெரிக்கர்கள் அதிக விலைகளை எதிர்கொள்ள நேரிடும்
இந்த ஆண்டு, இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு வரி விதிப்பதாக டிரம்ப் பலமுறை மிரட்டல் விடுத்துள்ள நிலையில், மிகப்பெரிய பிராண்ட்-பெயர் மருந்து தயாரிப்பாளர்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவில் தொழிற்சாலைகளைக் கட்டுவதற்கு அல்லது விரிவுபடுத்துவதற்கு பில்லியன் கணக்கான டாலர்களை செலவிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். ஆனால், அந்தத் திட்டங்கள் எவ்வளவு விரைவாகத் தொடர முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்தியர்களுக்கு பாதிப்பு
ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக கூறி, இந்தியாவின் மீது 50 சதவிகித வரியும் விதித்துள்ளார். இதனால், இருநாடுகளுக்கு இடையேயான உறவு சிக்கலான சூழலில் உள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்கள் மீதும் தற்போது 100 சதவிகித வரியை விதித்துள்ளார். இதுபோக ஃபர்னீட்சர் மற்றும் ட்ரக்குகள் உள்ளிட்டவற்றின் மீது புதிய வரிகளை அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்த துறையை சார்ந்த இந்திய நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டின்முதல் பாதியில் மட்டும் ரூ.32,000 கோடி மதிப்பிலான மருந்துகளை அமெரிக்காவுக்கு இந்தியா அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.