தெலங்கானா மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கே.சந்திரசேகரராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் 15 நவம்பர் 2021ல் தமிழ்நாடு வர இருப்பதாக அந்த கட்சியின் தலைவர் கே.டி.ராமாராவ் தெரிவித்துள்ளார். 


நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து மாநில முதலமைச்சர்களையும் ஒன்று திரட்டும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளது. இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அனைத்து மாநில முதல்வர்களிடமும் எடுத்துச்செல்லும் பணியில் திமுக எம்.பி.க்கள் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் இவர்கள் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவைச் சந்தித்து நீட் தொடர்பான கடிதத்தை அளித்து ஆதரவு கோரினர். இதையடுத்துத்தான் தமிழ்நாட்டின் கட்சிகளைப் பற்றி அறிந்துகொள்ளும் திட்டம் அங்கே உருவானதாகத் தெரிகிறது. 


கே.சந்திரசேகரராவின் மகனும் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான கே.டி.ராமாராவ் இதுகுறித்துக் கூறுகையில், ‘நீட் தொடர்பாக ஸ்டாலின் அரசுடன் நாங்கள் முழுவதுமாக உடன்படவில்லை. எங்கள் மாநிலத்திலிருந்து வெளிமாநிலத்துக்குச் சென்று மருத்துவம் பயிலும் மாணவர்கள் அதிகம் உள்ளார்கள். இருந்தாலும் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் இங்கே வருகை தந்ததை அடுத்து தமிழ்நாட்டுக் கட்சிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளோம். ஒரு கட்சி 20 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்திருப்பது சாதாரண காரியம் இல்லை. அதனை திமுகவும் அதிமுகவும் செய்திருக்கிறது. அதனால் தமிழ்நாடு வந்து அந்தக் கட்சிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம் என இருக்கிறோம்"  எனக் கூறியுள்ளார். 


முன்னதாக, அஇஅதிமுகவின் 50-வது ஆண்டு பொன்விழா அண்மையில்தான் கொண்டாடப்பட்டது. 1972-ஆம் ஆண்டு எம்ஜிஆர் "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற  இயக்கத்தை தொடங்கினார். தமிழ்நாடு அரசியலில் அஇஅதிமுக, திமுக என்ற இருபெரும் திராவிட அரசியல் கட்சிகள் கோலோச்சி வருகின்றன. கிட்டத்தட்ட 1967 வருட சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, நடைபெற்ற அனைத்து  தேர்தல்களிலும் திமுக, அதிமுக என்ற இரண்டு பெரிய திராவிட கட்சிகள் ஒட்டுமொத்த வாங்கு வங்கியில் 60- 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வருகின்றன. 


ராமாராவ்  தெலங்கானா மாநிலத்தின் சிரிசில்லா தொகுதியின் எம்.எல்.ஏ. மேலும் சந்திரசேகரராவ் அமைச்சரவையில் நகர்புற வளர்ச்சி, ஐ.டி, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக உள்ளார். 


மேலும், ‘கே சந்திரசேகரராவ் தேசிய அரசியலில் நுழைய சரியான தருணம் இது. அதனால் கட்சியை வலுப்படுத்த வேண்டிய சூழலில் உள்ளோம்.அதன் காரணமாக திராவிடக் கட்சிகளின் உட்கட்சி அமைப்புகள் அதன் வரலாறு ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள உள்ளோம். இதற்காக எங்கள் குழு தமிழ்நாடு வந்து பயிற்சி எடுத்துக்கொள்ளும். இதற்கான திட்டமிடல் வருகின்ற நவம்பர் 15ல் நடைபெறும் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு முடிவு செய்யப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.


 


நவம்பர் 15ல் தெலங்கானா மாநிலம் வாராங்கலில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தொடங்கப்பட்டதன் 20ம் ஆண்டு விழாப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. மேலும், தெலங்கானா கடந்த 7 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி குறித்தும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும்.