தெலுங்கானா மாநில முதல்வர் கே.சி. சந்திரசேகர்ராவ். தென்னிந்தியாவின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக திகழும் இவர் சமீபகாலமாக பா.ஜ.க.வையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், முதல்வர் சந்திரசேகர் ராவ் விரைவில் தேசிய கட்சியை தொடங்க உள்ளதாக கடந்த மாதம் தகவல் பரவியது.
தேசிய கட்சி தொடங்குவது தொடர்பாக சந்திரசேகர ராவ் பல்வேறு மாநில தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு இன்று தனது தேசிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், சந்திரசேகர ராவ் தேசியக்கட்சி தொடங்க உள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தெலுங்கானா வாராங்கல் பகுதியில் தெலுங்கானா ராஷிடிரிய சமிதி நிர்வாகி ராஜனலா ஸ்ரீஹரி என்ற நபர் மதுப்பிரியர்களுக்கு மது மற்றும் உயிருடன் உள்ள கோழியை இலவசமாக வழங்கியுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சந்திரசேகர ராவ் தேசியக்கட்சி தொடங்க உள்ளதால் அதை கொண்டாடும் வகையிலும், அவரது ஆதரவாளர்கள் மக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில் மதுப்பிரியர்களுக்கு மது மற்றும் உயிருடன் கோழி கொடுத்தது நெட்டிசன்கள் பார்வையில் பட்டு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
முன்னதாக இதுதொடர்பாக சந்திரசேகர்ராவ் அலுவலகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தெலுங்கானா இயக்கம் தொடங்குவதற்கு முன்பு நாங்கள் செய்ததைப் போன்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிவுஜீவிகள், பொருளாதார வல்லுனர்கள் மற்றும் நிபுணர்களுடன் நீண்ட நேர ஆலோசனைக்கு பிறகு மாற்று தேசிய நிகழ்ச்சி நிரலில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. இதனால், மிக விரைவில் தேசிய கட்சியை உருவாக்குவதும், அதன் கொள்கைகளை உருவாக்குவதும் நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலத்தில் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பிறகு தேசிய அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சந்திரசேகர் ராவ். 2019 தேர்தலுக்கு முன்பே அவர் மம்தா பானர்ஜி, தேவகவுடா, அகிலேஷ் யாதவ், ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக், ஸ்டாலின் ஆகியோர சந்தித்தார். ஆனால், அப்போது அவரால் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
தேசிய கட்சி அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் நான்கும் மேற்பட்ட மாநிலங்களில் சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களில் குறைந்தது 6 சதவீதம் வாக்குகளைப் பெற வேண்டும். இதனால், சந்திரசேகர் ராவ் எதிர்வரும் குஜராத், கர்நாடகா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் உத்தரபிரதேச தேர்தல்களில் கவனத்தை செலுத்த உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.