பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவன குழுவினர் 22 பேர் திரிபுராவில் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தாண்டு நடைபெற்று முடிந்த தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் வெற்றி பெற்றன. இந்த இரு கட்சிகளுக்கு ஐ-பேக் நிறுவனம் தேர்தல் மற்றும் அரசியல் நகர்த்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வந்தது. அதன் தலைவர் பிரசாந்த் கிஷோர் இந்த இரு கட்சிகளுக்கு தேர்தல் வெற்றி வியூகங்களை வகுப்பத்தில் முக்கிய பங்கு ஆற்றினார்.


2023ல் திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு கள நிலவரம் பற்றி அறிந்துகொள்ள ஐபேக் குழுவினர் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. திரிபுரா தலைநகர் அகர்தலாவில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்தாகவும், பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அகர்தலாவில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த நிலையில், 22 ஐபேக் குழுவினரையும் காவல்துறையினர் அங்கேயே சிறைவைத்துள்ளனர். இது, சமூக  ஊடகங்களில் பேசும் பொருளாக உருவெடுத்தது. 






 


இந்த ஜனநாயகத்துகு எதிரான நடவடிக்கை என திர்ணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து தனது ட்விட்டரில், "திரிபுரா நிலத்தில்  நாங்கள் கால் பதிப்பதற்கு முன்பே பாஜக தனது அச்சத்தை வெளிபடுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் எங்களது வெற்றி அவர்களை நிலைகுலைய செய்திருக்கலாம். தற்போது, 23 ஐ-பேக்  ஊழியர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.இது, ஜனநாயகத்தை சீரழிக்கும் முயற்சி" என்று பதிவிட்டார். 






கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஐ-பேக் குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அகர்தலா காவல்துறை ஆணையர் மானிக் தாஸ் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறுகையில்," திரிபுராவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமளில் உள்ளது. மாநில எல்லைக்குள் வர கொரோனா இல்லை என்ற சான்றிதழ் முக்கியம். எனவே, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை  நிர்வகிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் அகர்தலாவில் பல இடங்களுக்கு சென்றுள்ளனர். அதுதொடர்பான விசாரணையும் மேகொண்டு வருகிறோம். அவர்கள், மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. கொரோனா பரிசோதனை முடிவிலும், விசாரணை அடிப்படையிலும் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்