காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, டீன் குரியகோஸ், ஹிபி ஈடன், ரவ்நீத் பிட்டு,குர்ஜீத் ஔஜிலா உட்பட 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடைபெறுகின்ற மழைக்காலக் கூட்டத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டதிருத்த மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்படுவதற்கு அவர்கள் இன்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதற்கான உத்தரவை சபாநாயகர் பிறப்பித்தார். 






மேலும் டி.என்.ப்ரதாபன், வி.வைத்திலிங்கம், சப்தகிரி சங்கர், ஏ.எம்.ஆரிஃப் மற்றும் தீபக் பைஜ் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 






முன்னதாக பெகசஸ் விவகாரம் தொடர்பாக முழு அவை நேரமும் விவாதிக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தீர்மானம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கு அதீத அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளனர். மேலும், முக்கியத்துவம் வாய்ந்த பெகாசஸ் ஒட்டு கேட்பு குறித்து விவாதிப்பதற்காக பேரவையின் பிற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டுமென்ற தீர்மானத்தை கொண்டுவரவும் முடிவெடுத்துள்ளனர்.      



இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இரு அவைகளைச் சேர்ந்த எதிர்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்று வருகிறது.  இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார்."ஒட்டு கேட்பு விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். பல நாடுகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளன. பிரான்ஸ், ஹங்கேரி, ஜெர்மனி போன்ற நாடுகள் பெகசஸ் விவகாரத்தில் தீவிரம்காட்டி வருகின்றன. பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் போன் ஒட்டு கேட்பு புகாருக்கு ஆதாரம் இல்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறி வருகிறது. பின், ஏன் விசாரணைக்கு உத்தரவிடக்கூடாது. எதனை மறைக்க முயற்சி செய்கிகிறார்கள்" என மாநிலங்களவையின் காங்கிரஸ்  எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்தார்.   “இந்த அரசாங்கம், இந்திய நாடாளுமன்றத்தின் ,மாண்பையும், இந்திய ஜனநாயகத்தையும் குறைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கை மிகவும் நியாயமானது. முதன் முறையாக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று படுகின்றன. நாடாளுமன்றம் செயல்படமால் இருப்பதற்கும் அரசின் அலட்சியமே காரணம். அரசாங்கத்தின் சட்டமன்ற நிகழ்ச்சி நிரலுக்காக மட்டுமே பாராளுமன்றம் கூட்டப்படுவதில்லை. பாராளுமன்றம் என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை பேசும் ஒரு இடம்” காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய  மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், " காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முயற்சித்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமலியால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளின்படி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யலாம். ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு. மழைக்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றம் சுமூகமாக செயல்படத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும். ஆனால், எதிர்க்கட்சிகள் விவாதம் செய்ய விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.