இந்திய அரசியலில் இது முக்கியமான ஆண்டு. மக்களவை தேர்தலுக்கு முந்தைய ஆண்டு என்பதால், இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.


அதன் தொடக்கமாக, நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திரிபுராவுக்கு பிப்ரவரி 16ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.


மூன்று மாநிலங்களுக்கும் சேர்த்து மார்ச் 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அதில், திரிபுராவை பொறுத்தவரையில், ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக கருதப்பட்ட மாநிலம். 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட்களின் ஆட்சியை கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் வெற்றி மூலம் பாஜக முடிவுக்கு கொண்டு வந்தது.


அந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியை முதல்முறையாக தோற்கடித்து பாஜக ஆட்சி அமைத்தது. தற்போது, ஐந்து ஆண்டு கால பாஜக ஆட்சியை தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. 


60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் தனித்து களம் காணும் பாஜக பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. பிரதான எதிர்கட்சிகளாக உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. 


மாணிக்ய தேவ் வர்மா:


இவர்களை தவிர்த்து முக்கிய தலைவராக உருவெடுத்திருப்பவர் பிரத்யோத் பிக்ரம் மாணிக்ய தேவ் வர்மா. பழங்குடி மக்களுக்கு என தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருபவர்.


திப்ராலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் தேவ் வர்மா, நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் கிங் மேக்கராக உருவெடுப்பார் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.


திரிபுரா ராஜ குடும்பத்தை சேர்ந்த இவர், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்தவர். திப்ரா மோதா கட்சியை தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். பழங்குடி மக்கள் மத்தியில் இவரின் பிரச்சாரம் எடுபட்டு வருகிறது என்றே சொல்லப்படுகிறது.


பழங்குடி மக்கள் மத்தியில் செல்வாக்கு:


மாநில மக்கள் தொகையில் 32 சதவிகிதத்தினர் பழங்குடி மக்கள். வங்கதேசம் உருவான பிறகு, கிழக்கு வங்கதத்தில் இருந்து வரும் அகதிகள் காரணமாக பழங்குடி மக்கள் முக்கியத்துவத்தை இழந்து வருவதாக பிரச்சாரம் செய்து வருகிறார் தேவ் வர்மா. இது, அவர்களின் உணர்வை தூண்டும் விதமாக இருப்பதால் அது வாக்காக மாறலாம் என கூறப்படுகிறது.


வரவிருக்கும் தேர்தலில், மாநிலத்தில் உள்ள 20 பழங்குடியின மக்களுக்கான ரிசர்வ் தொகுதிகளில் இவர் பாஜகவுக்கு மிக பெரிய இழப்பை ஏற்படுத்துவார் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.


கடந்த 2019ஆம் ஆண்டு, காங்கிரஸிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த நிலையில், திப்ரா பழங்குடியின முற்போக்கு பிராந்தியக் கூட்டணி என்று அழைக்கப்படும் திப்ரா மோதா கட்சியை (டிஎம்பி) உருவாக்கினார். 


தாக்கத்தை ஏற்படுத்துவாரா கிங் மேக்கர்:


2021 திரிபுரா பழங்குடி கவுன்சில் தேர்தலில் ஆளும் பாஜக-IPFT கூட்டணி, இடது முன்னணி மற்றும் காங்கிரஸை தோற்கடித்தார். இந்த தேர்தலில், மொத்தமுள்ள 60 இடங்களில் 42 இடங்களில் போட்டியிடுகிறது அவரின் கட்சி. பழங்குடியினர் பகுதிகளில் வலுவான அரசியல் சக்தியாக திப்ரா மோதா கட்சி பார்க்கப்படுகிறது.


பழங்குடியினர் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தாலும், பிற சமூகங்களை ஒதுக்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். இந்த தேர்தலில், அவர் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.