நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திரிபுராவுக்கு பிப்ரவரி 16ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.


மூன்று மாநிலங்களுக்கும் சேர்த்து மார்ச் 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அதில், திரிபுராவை பொறுத்தவரையில், ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக கருதப்பட்ட மாநிலம். 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட்களின் ஆட்சியை கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் வெற்றி மூலம் பாஜக முடிவுக்கு கொண்டு வந்தது.


அந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியை முதல்முறையாக தோற்கடித்து பாஜக ஆட்சி அமைத்தது. தற்போது, ஐந்து ஆண்டு கால பாஜக ஆட்சியை தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. 60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் தனித்து களம் காணும் பாஜக பல சவால்களை எதிர்கொண்டுள்ளது.


முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி TIPRA என்ற தனிகட்சி தொடங்கிய பிரத்யோத் தேப் பர்மனிடம் கூட்டணி தொடர்பாக பாஜக பேச்சுவார்த்தை மேற்கொண்டது. ஆனால், ராஜ குடும்பத்தை சேர்ந்த பர்மனிடம் மேற்கொண்ட கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இருப்பினும், ஐபிஎஃப்டி கட்சியிடம் கூட்டணி தொடர்பாக பாஜக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது. 48 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் பல முக்கிய பெயர்கள் இடம்பெற்றுள்ளது. தன்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் பிரதிமா பெளமிக் களமிறக்கப்பட்டுள்ளார். திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா போர்டோவாலி தொகுதியில் போட்டியிடுகிறார்.


பாஜக மத்திய தேர்தல் குழு, பாஜக நாடாளுமன்ற குழு உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளதாக திரிபுரா மாநில பாஜக தலைவர் ராஜீப் பட்டாசார்ஜி தெரிவித்துள்ளார். டெல்லிக்கு சென்றுவிட்டு அங்கு மூத்த தலைவர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு ராஜீப் பட்டாசார்ஜி நேற்று திரிபுரா திரும்பினார்.


முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா, மத்திய அமைச்சர் பிரதிமா பௌமிக், துணை முதலமைச்சர் ஜிஷ்ணு தேவ் வர்மா, முன்னாள் முதலமைச்சரும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள விப்லப் குமார் தேப், அமைப்புச் செயலர் பனீந்திரநாத் சர்மா, பாஜக திரிபுரா தேர்தல் பொறுப்பாளர் டாக்டர் மகேஷ் சர்மா ஆகியோர் மேல்மட்ட மூத்த தலைவர்களிடம் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். 


வேட்பாளர் பட்டியல் குறித்து பேசியுள்ள அவர், "பட்டியல் சாதியினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களை சேர்ந்தவர்கள் பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.


2018 சட்டப்பேரவை தேர்தலில், பாஜக 43.59 சதவிகித வாக்குகளைப் பெற்று, பெரும்பான்மை இடங்களை (36) கைப்பற்றி விப்லப் குமார் தேப் முதலமைச்சரானார். ஆனால், கட்சியில் அதிருப்தி நிலவ, விப்லப் குமார் தேப் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, முதலமைச்சர் பொறுப்பு மாணிக் சாஹாவுக்கு வழங்கப்பட்டது.


கடந்த தேர்தலில், இடது முன்னணி கூட்டணி, 44.35% வாக்குகளைப் பெற்ற நிலையில், 16 இடங்களில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.