நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில், வடகிழக்கில் அமைந்துள்ள திரிபுராவில் பிப்ரவரி 16ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. அதன்படி, மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக கூட்டணி 31 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கம்யூனிஸ்ட்களின் கோட்டைகளின் ஓட்டை:
இதன் மூலம், தனித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பாஜக பெற்றுள்ளது. திரிபுரா, ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக கருதப்பட்ட மாநிலம். 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட்களின் ஆட்சியை கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் வெற்றி மூலம் பாஜக முடிவுக்கு கொண்டு வந்தது.
அந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியை முதல்முறையாக தோற்கடித்து பாஜக ஆட்சி அமைத்தது. தற்போது, ஐந்து ஆண்டு கால பாஜக ஆட்சியை தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகிறது.
கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கூட்டணியின் நிலை என்ன?
இந்த முறை, பிரதான எதிர்க் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளது. வெளியாகியுள்ள தகவலின்படி, கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் கூட்டணி 18 இடங்களின் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த கட்சிகளை தவிர்த்து மூன்றாவது முக்கிய கட்சியாக இருப்பது புதிதாக தொடங்கப்பட்ட திப்ரா மோதா கட்சி. இந்த கட்சியின் தலைவர் மாணிக்ய தேவ் வர்மா, இந்த தேர்தலில் கிங் மேக்கராக உருவெடுத்திருக்கிறார் என அரசியல் வல்லுநர்கள் கருதியிருந்தனர்.
மும்முனை போட்டியில் பாஜக முன்னிலை:
அதன்படி, திப்ரா மோதா கட்சி 11 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக கூட்டணியை பொறுத்தவரையில், பாஜக 55 தொகுதிகளிலும் ஐபிஎஃப்டி கட்சி 5 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது.
இந்த முறை திரிபுராவில் 87.63 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தலில், 89.38 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது.
மொத்தமுள்ள 60 தொகுதிகளில் மொத்தமாக 259 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அங்கும் இங்குமாய் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தபோதிலும், பெரும்பாலான பகுதிகளில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.
திப்ராலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார் திப்ரா மோதா கட்சியின் தேவ் வர்மா. திரிபுரா ராஜ குடும்பத்தை சேர்ந்த இவர், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்தவர்.
திப்ரா மோதா கட்சியை தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். பழங்குடி மக்கள் மத்தியில் இவரின் பிரச்சாரம் எடுபட்டு வருகிறது என்றே சொல்லப்படுகிறது.