மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நாளை நடத்தப்பட உள்ளது. ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்வது தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.


17வது மக்களவை சபாநாயகராக பதவி வகித்த ஓம் பிர்லாவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் வேட்பாளராக களமிறக்கியுள்ளது. 8வது முறையாக எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள கே. சுரேஷை இந்தியா கூட்டணி வேட்பாளராக அறிவித்துள்ளது.


சபாநாயகர் பதவிக்கான தேர்தல்:


இப்படிப்பட்ட சூழலில், சபாநாயகர் பதவிக்கான தேர்தல், இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கே, சுரேஷை வேட்பாளராக அறிவிப்பது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிடம் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை செய்யவில்லை என கூறப்படுகிறது.


இதன் காரணமாக, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளரை காங்கிரஸ் தன்னிச்சையாக அறிவித்திருப்பதாக திரிணாமுல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.


ஆனால், கடைசி நிமிடத்தில்தான் வேட்பாளரை களமிறக்குவது என முடிவு எடுத்ததாக காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இன்று மதியத்திற்குள் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.


இந்தியா கூட்டணியில் விரிசலா?


பொதுவாக ஆளுங்கட்சிக்கு சபாநாயகர் பதவியும் எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியும் வழங்குவது மரபு. ஆனால், இந்த முறை துணை சபாநாயகர் பதவி வழங்குவது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு பாஜக தரப்பில் எந்த வித உத்தரவாதமும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.


இது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்புதான் சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளரை நிறுத்த இந்தியா கூட்டணி  சார்பில் காங்கிரஸ் முடிவு செய்தது.


இந்த விவகாரத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் இடையே பிரச்னை நிலவி வரும் நிலையில், தனக்கு ஆதரவு அளிக்கும்படி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களிடம் காங்கிரஸ் எம்.பி. கே. சுரேஷ் ஆதரவு கோரியுள்ளார்.


திரிணாமுல் கட்சியின் அபிஷேக் பானர்ஜியை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான திடீர் முடிவு குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சுதீப் பந்தோபாத்யாய் கூறுகையில், "டி.வி.யில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். டெரெக் ஓ பிரையன் வந்து இதுதொடர்பாக கேட்டார். நம்மிடம் ஆலோசனை செய்யவில்லை என்றேன். காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும். நாம் கூட்டம் போட்டு ஆலோசனை செய்வோம். இதுதொடர்பாக தலைவர் முடிவு எடுப்பார்" என்றார்.