மேங்குவங்கத்தில் ஆளும் கட்சியாக உள்ள திரிணாமூல் காங்கிரஸின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் மஹுவா மொய்த்ரா.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது ஆளும் பாஜகவை தரவுகள் மூலம் திணறடிப்பவர் மொய்த்ரா. நாடாளுமன்றத்தில் இவர் ஆற்றும் உரைகள் சமூக வலைதளங்களில் பேசு பொருளை உருவாக்கி பாஜகவுக்கு பெரும் சவாலாக அமைந்து விடுகிறது.
சமீப காலமாக, கால்பந்து விளையாடியும், தேனீர் போட்டும் இவர் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அது பட்டைய கிளப்பி வருகிறது. இந்நிலையில், கேரம் போர்டில் தன்னுடைய தனி திறமையை வெளிப்படுத்தும் விதமாக அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய கிருஷ்ணாநகர் மக்களவை தொகுதியில் கேரம் போர்டு விளையாடுவது போன்ற வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். பச்சை வண்ண ஸ்ட்ரைக்கரை பயன்படுத்தி அவர் பொறுமையாக காய்களை குறி பார்ப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. இறுதியாக, அவர் ஒரு காயினையும் போட்டு விடுகிறார்.
இரண்டாவது காயினை அவர் போட முயற்சிக்கும் போது அருகில் இருப்பவர்கள் அவரை உற்சாகப்படுத்துகின்றனர். ஆனால், இந்த முறை அவரால் காயினை அடிக்க முடியவில்லை.
இதையடுத்து, அவருடன் கேரம் போர்டு விளையாடும் நபருக்கு ஸ்ட்ரைக்கர் சென்றுவிடுகிறது. இதை, வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட அவர், வெயிலுக்கு மத்தியில் கிராமத்தில் சிறிது நேரம் கேரம் விளையாடியதாக பதிவிட்டுள்ளார்.
நேற்று பகிரப்பட்ட இந்த வீடியோவுக்கு ஏற்கனவே 81 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும் மூவாயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. மேலும், இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. பல பயனர்கள் இந்த வீடியோவில் கமெண்ட் செய்துள்ளனர்.
சமீபத்தில், டீக்கடையில் டீ போட்டு கொடுக்கும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கித்தில் பகிர்ந்த மஹுவா மொய்த்ரா பிரதமர் மோடியை கிண்டலாக சீண்டினார்.
அந்த வீடியோவில், திரிணாமுல் கட்சியின் எம்.பி ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைச் சேர்ப்பதைக் காணலாம், அப்போது அவரைச் சுற்றி ஒரு கூட்டம் கூடுகிறது.
"டீ தயாரிப்பதை முயற்சித்தேன்... அது என்னை எங்கு அழைத்துச் செல்லும் என்று யாருக்குத் தெரியும் :-)," என்று திரிணாமுல் எம்.பி தனது பதிவில் கேப்ஷனாக இட்டுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா தனது வீடியோவுக்கு இட்டுள்ள கேப்ஷன் "சாய்வாலா " என்று அழைக்கப்படும் பிரதமர் நரேந்திர மோடியைக் குறிப்பதாக சமூக ஊடகங்களில் பலர் பதிவிட்டும், மஹுவா மொய்த்ராவின் பதிவுக்கு கமெண்ட் செய்தனர்.