சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு இன்று முதல் ஸ்பாட் புக்கிங் சேவையானது நிறுத்தப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில்
கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக அளவில் புகழ் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு தமிழ்மாதம் பிறப்பு அன்று திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெற்று அடுத்த சில நாட்களில் நடை அடைக்கப்படும். அதேசமயம் கார்த்திகை, மார்கழி மாதம் சபரிமலை சீசன் என்பதால் அங்கு மண்டல பூஜை மற்று மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம்.
இந்த காலக்கட்டத்தில் 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும் நிலையில் நடப்பாண்டு எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை திருவாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது. ஏற்கனவே முன்பதிவு செய்யும் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கும் நிலையில், அவ்வாறு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங்கும் செய்யப்படுகிறது. ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் கிட்டதட்ட 15 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கும் சூழலும் ஏற்படுகிறது.
மகரஜோதி தரிசனம்
கூட்டத்தை கருத்தில் கொண்டு நடை திறக்கும் நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க 13 ஆயிரம் போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மண்டல விளக்கு முடிந்து மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் மட்டும் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
இன்னும் மகரஜோதிக்கு சில நாட்களே உள்ள நிலையில் ஜனவரி 15 ஆம் தேதி அதிகாலை மகர சங்கரம பூஜையும், மாலையில் மகர ஜோதி தரிசனமும் நடக்கிறது. இதனை முன்னிட்டு 13 ஆம் தேதி பந்தளத்தில் இருந்து திரு ஆபரணம் பவனியானது புறப்படுகிறது. இந்த ஆபரணப்பெட்டி ஜனவரி 15 ஆம் தேதி சன்னிதானத்துக்கு வந்து சேரும். அன்று அதிகாலை சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயரும் காலமாக குறிக்கப்பட்டுள்ள அதிகாலை 2.40 மணிக்கு தான் மகர சங்கம பூஜை நடைபெறுகிறது.
ஸ்பாட் புக்கிங் நிறுத்தம்
தொடர்ந்து திருவாபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும். அன்று மாலை பொன்னம்பலமேட்டில் தெரியும் மகரஜோதியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் இன்று முதல் ஸ்பாட் புக்கிங் நிறுத்தம் செய்யப்படுகிறது. வரும் ஜனவரி 14 ஆம் தேதி 50 ஆயிரம் பேருக்கும், 15 ஆம் தேதி 40 ஆயிரம் பேருக்கும் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.