தேசிய அளவில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் பரபரப்பை கிளப்பி வந்த அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.


32 ஆண்டுகளாக மவுன விரதம்:


பல்வேறு சர்ச்சைகளும், நீதிமன்ற வழக்குகளை தொடர்ந்து அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி இந்த கோயில் திறக்கப்பட்டு, பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். கும்பாபிஷேகத்தின் போது கோயில் கருவறையில் பிரதமர் மோடி குழந்தை ராமரின் சிலையை நிறுவ உள்ளார். 


இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயிலுக்காக கடந்த 32 ஆண்டுகளாக 85 வயது மூதாட்டி ஒருவர் மவுன விரதம் இருந்து வந்திருக்கிறார். அதாவது, உத்தர பிரதேச மாநிலம் போன்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி தேவி அகர்வால் (85). இவரது கணவர் தேவ்கினந்தன். இவர் இறந்துவிட்டார்.


இந்த தம்பதிக்கு 4 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இதில் 3 பேர் இறந்த நிலையில், மூதாட்டி சரஸ்வதி தேவி அகர்வால் வசித்து வருகிறார். இவர் படிக்கவில்லை. இந்து மதத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்ட இவர், ராமர் சார்ந்த புத்தகங்களை படித்து வருகிறார். 


ஒரு வேளை மட்டுமே உணவு:


இவர் அயோத்தி ராமர் கோயிலுக்காக கடந்த 32 ஆண்டுகளாக மவுன விரதம் இருந்து வருகிறார். அரிசி, பருப்பு மற்றும் ரொட்டி ஆகியவற்றைக் கொண்ட சைவ உணவை மட்டும் சாப்பிட்டிருக்கிறார். காலை மற்றும் மாலையில் ஒரு கிளாஸ் பால் மற்றும் ஒரு வேளை உணவு மட்டும் சாப்பிட்டு வந்திருக்கிறார்.


ராமர் கோயில் கட்டி திறக்கப்பட்ட பிறகு தான் மவுன விரதத்தை கைவிடுவதாக அவர் தெரிவித்தார். கடந்த 1992ம் ஆண்டு முதல் யாரிடமும் பேசாமல் மவுன விரதம் இருந்து வருகிறார். கடந்த 32 ஆண்டுகளாக மவுன விரதம் இருந்து வந்த நிலையில், தற்போது மவுன விரதத்தை கைவிட இருக்கிறார்.


அதாவது, ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், அந்த தினத்தில்  ஸ்ரீராம கோஷத்துடன் மவுன விரதத்தை முடிக்க உள்ளார்.இந்த நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அறக்கட்டளை சார்பில் மூதாட்டி சரஸ்வதி தேவி அகர்வாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து, ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க நேற்று ஜார்க்கண்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அடுத்த நான்கு மாதங்கள் வரை அயோத்தி ராமர் கோயிலில் மூதாட்டி சரஸ்வதி தேவி அகர்வால் தங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


Senthil Balaji Case: முடிவுக்கு வருமா செந்தில் பாலாஜி சிறைவாசம்? ஜனவரி 12ல் தீர்ப்பு வழங்கப்போகும் நீதிமன்றம் - சூடுபிடிக்கும் விசாரணை