உச்ச நீதிமன்றத்தின் முதல் மூன்று நீதிபதிகளை அடங்கிய கொலிஜியம், சென்ற மாதத்தில் ஏற்கனவே பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாகப் பணியாற்றிவரும் 28 பேரை வேறு நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக மாற்றும்படி ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை வழங்கியது. அதில் முதல் கட்டமாக 15 பேரையும், இரண்டாம் கட்டமாக 7 பேரையும் ஊர்மாற்றம் செய்ய குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்கி உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுவிட்டன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் உயர் நீதிமன்றம் இருக்க வேண்டும் என்பதும் (பிரிவு 214), அந்த நீதிமன்றத்திற்கான நீதிபதிகளை எப்படி நியமிக்க வேண்டும் என்பதும் (பிரிவு 217-ல்) அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஒருவரை ஒரு மாநிலத்தின் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்த பிறகு, அவரை வேறொரு மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக ஊர்மாற்றம் செய்வதற்குக் குடியரசுத்தலைவர் உச்ச் நீதிமன்றத் தலைமை நீதிபதியைக் கலந்தாலோசிக்கலாம் என்று பிரிவு 212-ல் கூறப்பட்டிருக்கிறது. நேர்மையான நீதிபதிகள் பழிவங்கப்படுகிறார்களா என்பது பலரிடமும் உறுத்தும் கேள்வியாக இருக்கிறது. மாற்றம் செய்யப்பட்ட 28 பேருடைய வயது, நியமிக்கப்பட்ட தேதி, பணிபுரியும் நீதிமன்றத்தில் முதுநிலை, புதிதாக பதவியேற்கப்போகும் நீதிமன்றத்தில் பெறக்கூடிய முதுநிலை, அந்த நீதிமன்றத்தில் அவர்களுக்கு மேல் முதுநிலைப்பட்டியலில் உள்ள மூத்த நீதிபதிகள் ஓய்வு பெறும் தேதி இவற்றையெல்லாம் கணக்கிட்டால், இந்தப் புதிய ஊர்மாற்றம் பல அதிர்ச்சி தரும் தகவல்களை அளிக்கின்றது.



சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அடுத்த அந்தஸ்தில் இருப்பவர் நீதிபதி டி.எஸ்.சிவஞானம். அவரை கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு ஊர்மாற்றம் செய்தால் நீதிபதி சிவஞானத்திற்குக் கீழ் நீதிபதிகளாக இருப்பவர்கள் அதிக அனுபவம் இல்லாதவர்களாக இருப்பார்கள். நீதிபதி சிவஞானம் பல வழக்குகளை பைசல் செய்வதனால் இந்த நீதிமன்றம் திறமையான நீதிபதியொருவரை இழந்துவிடும் என்று கூறி வருமான வரி வழக்கறிஞர் சங்கம் மனு அளித்தனர். ஆனால் உச்ச நீதிமன்ற கொலிஜியம் அதை ஏற்றுக கொள்ளவில்லை. தெலுங்கானாவில் தலைமை நீதிபதி பொறுப்பில் இருப்பவர் எம்.எஸ்.எஸ்.ராமச்சந்திர ராவ், தெலுங்கானாவில் முதல் நீதிபதியாக இருக்கும் அவர் பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்தில் 9-வது முதுநிலைப் பட்டியலில் இருக்கும்படி ஊர்மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேசமயத்தில் பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றத்தில் முதுநிலைப் பட்டியலில் முதலாவதாக இருப்பவர் நீதிபதி ஜஸ்வந்த் சிங். ஒடிஸா நீதிமன்றத்திற்குச் செல்லும் அவர், அங்கும் முதல் நீதிபதியாக இருப்பார். பஞ்சாப் நீதிமன்றத்தில் இரண்டாவதாக இருக்கக்கூடிய ராஜன் குப்தா, பாட்னா செல்கிறார். அங்கு அவர் முதல் மூத்த நீதிபதியாக இருப்பார். அதேபோல், பாட்னாவில் நாலாவது நீதிபதியாக இருந்த அசானுதீன் அமனுல்லா ஆந்திரப் பிரதேச நீதிபதியாக செல்கிறார்; அங்கு முதல் நீதிபதியாக அவர் இருப்பார். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அவர் பாட்னாவில் தொடர்ந்து இருந்திருந்தால் இன்னும் இரண்டு வருடத்திற்கு முதுநிலைப் பட்டியலில் அதே நான்காவது இடத்தில்தான் இருந்திருப்பார். இதுபோன்று அரசுக்கு சதாகமானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறதோ என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.



அலகாபாதின் முதல் நீதிபதியாக இருக்கக்கூடிய எம்.என்.பண்டாரி (இன்னும் அவருக்கு உத்தரவு வரவில்லை) சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் ஆரம்பத்தில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு (5.7.20 07) அங்கிருந்து ஊர்மாற்றம் செய்யப்பட்டு அலகாபாத் (15.3.2019) சென்றார். அலகாபாதில் இருக்கும் அவரை சென்னைக்கு மாற்றம் செய்வதன் மூலம் அவர் சென்னையில் முதல் நீதிபதியாக இருப்பதுடன், இங்கிருக்கும் தலைமை நீதிபதியை ஊர்மாற்றம் செய்தால் பண்டாரி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆகும் வாய்ப்பும் இருக்கிறது. இது இங்குள்ளவர்களிடம் - குறிப்பாக தென் இந்தியர்களிடம் - ஒரு சங்கடவுணர்வை உருவாக்கியிருக்கிறது. ‘இனி பல மாநில உயர் நீதிமன்றங்களிலும் வட மாநிலத்தவர்களே தலைமைப் பொறுப்பிலும், அதற்கு அடுத்த ஸ்தானங்களிலும் பதவி வகிப்பார்கள்’ என்பதே அது. ‘அரசியல் தளத்தில் ஒன்றிய அரசு இதன் மூலம் மறைமுகமாக மாநில அரசுகளை மிரட்டி வைப்பதுடன், தங்களது கொள்கைக்கு விசுவாசமானவர்கள் மூலம் பல வேலைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்’ என்று அவர்கள் தெரிவிக்கும் அச்சத்தை கருத்தில் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.


இந்த 28 நீதிபதிகளின் ஊர்மாற்றப் பரிந்துரையும், அதை ஒன்றிய அரசு உடனே ஏற்றுக்கொண்டு ஆலோசனை வழங்கிய வேகத்தையும் பார்க்கும்போது இதற்கான காரணங்கள் அறிவிக்கப்படாவிட்டாலும், இதன் பின்னால் இருக்கும்  திரைமறைவு நடவடிக்கைகளை சாதாரண மக்கள் கூட ஊகித்துக்கொள்ளலாம்.  நீதித் துறையின் சுதந்திரத்தைக் காப்பதற்கு நியமனங்களையும், ஊர்மாற்றங்களையும் கொலிஜியம் நடைமுறை மூலம் நிர்வகித்துவரும் செயல்பாடுகள் நீதிமன்றத்தின் மீது இருக்கும் நம்பிக்கையைக் குலைத்துவருகிறது. வெளிப்படையான அணுகுமுறை ஒன்றுக்கு மாறுவதே நீதித் துறை இத்தகுச் சூழலிலிருந்து விடுபட ஒரே வழி!