வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்றால், பெரும்பாலானோரின் மனதில் முதலில் தோன்றுவது விமானம் தான். ஆனால் இந்தியாவில் சில ரயில் நிலையங்களிலிருந்து நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கு நேரடியாக ரயிலில் பயணம் செய்யலாம். பலருக்கு தெரியாத இந்த விபரங்களை இப்போது பார்க்கலாம்.
ஜெய்நகர் ரயில் நிலையம் – நேபாளத்திற்கான முக்கிய இணைப்பு
பீகாரில் உள்ள மதுபனி மாவட்டத்தின் ஜெய்நகர் ரயில் நிலையம், நேபாளத்திற்குச் செல்லும் இந்தியாவின் கடைசி ரயில் நிலையமாக கருதப்படுகிறது. இங்கிருந்து நேபாளத்தின் ஜனக்பூர் நகருக்கு நேரடி ரயில்கள் இயக்கப்படுகின்றன. சோதனைக்குப் பிறகு பயணிகள் நேரடியாக நேபாள ரயிலில் ஏறலாம்.
ரக்சால் சந்திப்பு – நேபாளத்திற்கான முக்கிய நுழைவாயில்
பீகார்–நேபாள எல்லையில் உள்ள ரக்சால் சந்திப்பு நேபாளத்திற்கான முக்கிய போக்குவரத்து மையமாக உள்ளது. இந்தியாவின் பல இடங்களை நேபாளத்துடன் இணைக்கும் ரயில்கள் இங்கு செல்கின்றன. இது நேபாளத்திற்கான மிகப் பெரிய நுழைவாயிலாகப் பார்க்கப்படுகிறது.
பெட்ராபோல் – வங்கதேச இணைப்பின் வரலாற்று நிலையம்
மேற்கு வங்காளத்தில் உள்ள பெட்ராபோல் ரயில் நிலையம், இந்தியா–வங்கதேச எல்லையில் இருப்பதைத் தவிர, பிரிட்டிஷ் காலத்திலேயே உருவான முக்கிய ரயில் பாதையாகும்
இங்கிருந்து வங்கதேசத்தின் குல்னாவிற்கு ரயில் பாதை உள்ளது.பந்தன் எக்ஸ்பிரஸ் இங்கு செல்கிறது. மேலும் பயணிகள் பயணிக்க பாஸ்போர்ட் மற்றும் விசா அவசியம்.
ராதிகாபூர் நிலையம் – சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கான மையம்
மேற்கு வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூரில் உள்ள ராதிகாபூர் ரயில் நிலையம், இந்தியா–வங்கதேச ரயில் போக்குவரத்துக்கான முக்கிய மையமாக செயல்படுகிறது. இது சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களை கையாளும் நிலையம். மேலும் இந்த ரயில் நிலையம் எல்லை சோதனைச் சாவடியாகவும் செயல்படுகிறது.
ஹால்டிபாரி – டாக்கா பயணத்திற்கான வழித்தடம்
வங்கதேச எல்லையிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஹால்டிபாரி ரயில் நிலையம், சிஹாலட்டி நிலையம் வழியாக வங்கதேசத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.இங்கிருந்து இந்தியாவைச் சேர்ந்த பயணிகள் டாக்காவுக்கு ரயிலில் செல்லலாம். வணிகமும் பயணத்திற்கும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடம் இது.
அட்டாரி ரயில் நிலையம் – பாகிஸ்தானுக்கான நுழைவாயில்
பஞ்சாபில் உள்ள அட்டாரி ரயில் நிலையம், இந்தியா–பாகிஸ்தான் ரயில் தடத்தில் மிக முக்கிய மையமாகும். இங்கிருந்து முன்பு சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் பாகிஸ்தானின் லாகூருக்கு இயக்கப்பட்டது. இது பாகிஸ்தானுக்குச் செல்லும் முக்கிய நுழைவாயிலாகப் பார்க்கப்படுகிறது.
முனாபாவ் ரயில் நிலையம்
ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள முனாபாவ் ரயில் நிலையம், பாகிஸ்தானின் கோக்ராபர்–கராச்சி வழித்தடத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தார் லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது. தற்போது இந்தியா–பாகிஸ்தான் இடையே ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பயணிக்க கடுமையான பாதுகாப்பு சோதனைகளும், பாஸ்போர்ட்–விசாவும் அவசியம்.
விமானம் இல்லாமல் வெளிநாட்டு பயணத்தை நினைத்தால் அது வியப்பாகத் தோன்றலாம். ஆனால் இந்தியாவில் இருந்து நேபாளம், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கு ரயில் மூலம் செல்லும் வசதிகள் இருப்பது மிகச் சிலருக்கே தெரியும். இந்த நிலையங்கள் இந்தியாவின் சர்வதேச ரயில் இணைப்பை வெளிக்காட்டுகின்றன.