சமீப காலமாக, இந்திய ராணுவத்திற்கு சொந்தமான விமானங்கள் விபத்தில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது. நேற்று முன்தினம், அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


அருணாச்சலப் பிரதேசத்தில் திராங் மலைப்பகுதியில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


மத்திய பிரதேசத்தில் விமான விபத்து:


இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் இரண்டு பயிற்சி விமானிகளுடன் சென்ற விமானம் இன்று விபத்துக்குள்ளானது. பாலகாட் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில், விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள லாஞ்சி மற்றும் கிர்னாபூர்  மலைப்பகுதியில் ஒரு ஆணின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.


இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சமீர் சௌரப் கூறுகையில், "காணாமல் போன பெண் பயிற்சி விமானியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். உடலை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.


மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் உள்ள பாலகாட் எல்லையில் உள்ள பிர்சி விமான நிலையத்திலிருந்து பயிற்சி விமானம் புறப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.


முந்தைய விமான விபத்துகள்:


இதேபோல, கடந்த 2021ஆம் ஆண்டு, டிசம்பர் 8ஆம் தேதி, நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட, 14 பேர், கோவை சூலுார் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். குன்னுார் காட்டேரி அருகே நஞ்சப்பா சத்திரத்தில் நிலவிய கடும் மேகமூட்டம் காரணமாக, ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.


செடிகள் சூழ்ந்த இடத்தில் பிபின் ராவத் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டார். மேலும் ராணுவப் பயிற்சி கல்லுாரி குரூப் கேப்டன் வருண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.


இந்த கோர விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிகேடியர் எல்.எஸ்., லிடர், லெப்., கர்னல் ஹர்ஜிந்தர் சிங், குருசேவக், ஜித்தேந்திர குமார், நாயக் விவேக் குமார், சாய் தேஜா, ஹவில்தார் சட்பல் உட்பட, 13 பேர் இறந்தனர்.


இவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ்சில் கோவை சூலுார் விமானப்படை தளத்துக்கு கொண்டு சென்ற போது வழிநெடுக்கிலும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். டிசம்பர் 15ஆம் தேதி, பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குரூப் கேப்டன் வருண் உயிரிழந்தார்.


இதையும் படிக்க: Covid Cases India : 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சம்...இந்தியாவை மீண்டும் மிரட்டும் கொரோனா..!