பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, டெல்லி என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தங்கள் மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் இயற்றப்படும் சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை என அந்தந்த மாநில அரசுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பாகுபாடு காட்டுகிறதா பாஜக?
இந்த நிலையில், நாகாலாந்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு என 33 சதவிகிதம் இடஒதுக்கீடு அமலில் உள்ளது.
ஆனால், தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி - பாஜக கூட்டணி அரசு நாகாலாந்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் உள்ளது. இதனால், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்திய பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும், உச்ச நீதிமன்ற உத்தரவை நாகாலாந்து அரசு பின்பற்றவில்லை. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் கொண்ட அமர்வு, நாகாலாந்து அரசையும் மத்திய அரசையும் சாடியது. நாகாலாந்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான அரசியலமைப்பு விதிகள் அமல்படுத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் மீண்டும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்:
ஒரே கட்சி (பாஜக / தேசிய ஜனநாயகக் கூட்டணி) மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சியில் இருந்தும், மத்திய அரசு ஏன் எதையும் செய்யவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ், "மாநிலத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு" என்றார்.
இதை தொடர்ந்து பேசிய சஞ்சய் கிஷன் கவுல், "மத்திய அரசு தயங்க காட்டுகிறது என எங்களை சொல்ல வைக்காதீர்கள். அரசியலமைப்புச் சட்டம் அமல்படுத்தப்படாத நிலையில் நீங்கள் என்ன செய்தீர்கள்? எங்களுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என நீங்கள் சொல்லி விட முடியாது. இதை நாங்கள் ஏற்க மாட்டோம்.
மற்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் மாநில அரசாங்கத்துடன் இணக்கமாக இல்லாத சூழலில், நீங்கள் நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். ஆனால், இங்கே மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் உள்ளது. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? நீங்கள் சொல்வதை நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம்.
நம் நாட்டில் சட்டத்தால்தான் சமூக மாற்றம் நிகழ்கிறது. சட்டம் அதற்கு உத்வேகத்தை அளிக்கிறது. மற்றபடி எல்லா இந்து ஆண்களும் ஒரு மனைவியை எளிதில் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா? மகள்களுக்குச் சொத்தில் சம பங்கைக் கொடுப்பார்களா? அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் சமத்துவத்தை வழங்குகிறது. அரசியலமைப்பையும் நாம் அமல்படுத்த வேண்டும். அமல்படுத்துவோம் என சொல்லிவிட்டு பின்வாங்கியுள்ளீர்கள்" என தெரிவித்தார்.