டாப்ஸியின் ’தப்பட்’ படம் நினைவிருக்கிறதா? சோஷியல் மீடியாவில் பெரிய விவாதத்தை உண்டு செய்த படம் அது. டாப்சியின் கன்னத்தில் விட்ட ஒரு அறைக்கு விவாகரத்து என்ற ஒற்றைலைன் தான் விவாதங்களுக்கு காரணம். இதுதான் ஆணாதிக்கத்தின் மீது விழுந்த அறை என ஒருதரப்பு பாராட்டினாலும், ஒரு அறைக்கே விவகாரத்து என்றால் இந்தியாவில் பல குடும்பங்கள் இந்நேரம் இங்கிருக்காது என்று எதிர்க்கருத்துகள் கிளம்பின. ''பொறுத்துப்போவதுதான் திருமண வாழ்க்கை. அதான் ரியாலிட்டி'' என்பதே தப்பட் படத்தை எதிர்த்தவர்களின் சாராம்சம். 'அதான் ரியாலிட்டி' இங்கு தொடங்குகிறது என்பதுதான் பிரச்னை.
கேரளாவில் சில தினங்களாக புயலைக் கிளப்பிக்கொண்டிருக்கும் ஒரு சம்பவம் விஸ்மயாவின் மரணம். ஆயுர்வேத மருத்துவத்துக்குப் படித்து வந்த 22 வயது விஸ்மயாவை அவரது குடும்பம் ஒரு வருடத்துக்கு முன்பு கோட்டயத்தைச் சேர்ந்த கிரண் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தது. தனது பெண் கணவன் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக நூறு சவரன் நகை, ஒரு ஏக்கர் நிலம், 9 லட்சத்துக்குக் கார் என வரதட்சணையை வாரி இறைத்திருக்கிறது குடும்பம். இத்தனைக் கொடுத்தும் விஸ்மயா அந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. கிரண் விஸ்மயாவை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார். திருமணமான ஆறு மாதத்திலேயே தன் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பிவிட்டார் விஸ்மயா. ஆனால் எப்படியோ சமாதானம் செய்து அவரைத் தன் வீட்டுக்கு மீண்டும் அழைத்துச் சென்றிருக்கிறார் கிரண்.
கிரண் அழைத்துச் சென்ற பிறகு தன் பெற்றோரிடம் பேசுவதையே முற்றிலுமாகத் தவிர்த்திருக்கிறார் விஸ்மயா. அதிகபட்சமாகத் தனது அம்மாவுடன் மட்டுமே அவரது உரையாடல் இருந்திருக்கிறது. கணவனால் தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட விஸ்மயா இரண்டு நாட்களில் உயிரிழந்தார். கொலையா தற்கொலையா என்கிற காரணம் தெரியவில்லை என்றாலும் இது வரதட்சணைக் கொடுமையால் நிகழ்ந்த மரணம். ஆனால் இந்த மரணத்திற்கு வரதட்சணையை கேட்டு அரிக்கும் மணமகன் குடும்பத்தினர் மட்டுமே காரணமா? இவ்வளவு துன்புறுத்தல் இருந்தும் தன் தந்தை வீட்டுக்கு வந்துவிடலாம் என விஸ்மயா யோசிக்காததன் காரணம் என்ன? காரணம் வேறு ஒன்றும் அல்ல, நாம் மேலே சொன்ன அதான் ரியாலிட்டிதான்.
கேரளாவில் கடந்த 13 ஆண்டுகளில் 212 மரணங்கள் வரதட்சணைக் கொடுமையால் நிகழ்ந்துள்ளன. வரதட்சணை புகாரை கையாளுவதில் என்னதான் சிக்கல் எனப்பேசிய தென் கேரளாவின் மாவட்ட பெண்கள் பாதுகாப்பு அதிகாரி, '' எங்களால் எதுவுமே செய்ய முடியவதில்லை. வரதட்சணை கொடுமை என்றாலும் பெண் வீட்டார் சமூகத்திற்காகவும், மகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் கூறிக்கொண்டும் அமைதியாக இருந்து விடுகின்றனர் என்கிறார். இங்கு தொடங்குகிறது பெண் வீட்டாரின் பிரச்னை.
''உனக்கு இனி எல்லாமும் இந்த குடும்பம்தான். நல்லதோ, கெட்டதோ இனி இவர்களுடன்தான்'' என பொசுக்கென தனியே உறவை அறுத்து பெண்களை வேறு கைகளில் கொடுத்து விடும் சோ கால்டு இந்திய சமூகத்தின் ஒரு பிரச்னைதான் வரதட்சணை உயிரிழப்புகளுக்கும் காரணம். கொடூர மன உளைச்சல்கள் கொடுக்கப்பட்டாலும் பெண் பொறுத்துப்போக வேண்டும் என சொல்லிப் பதிய வைக்கிறது சமூகம். 'என்னை துன்புறுத்துகிறார்கள்' பெண் கண்கலங்கி ஓடி வந்தால் ''நாமதாம பொறுத்துப்போவனும்''னு சொல்லும் தருணத்தில் அவர் நிற்கதியாய் விடுகிறார். என்ன புகார் கூறினாலும் நம்மை பொறுத்துப்போகத்தான் சொல்வார்கள், அமைதியாய் இருக்கத்தான் சொல்வார்கள் என்ற மனநிலைக்கு வந்த பிறகு எந்த ஒரு கடினமான சூழலையும் பெண்கள் பிறந்த வீட்டில் பகிர்ந்துகொள்வதே இல்லை. பிறந்த வீட்டிலிருந்து கிடைக்காத முழு ஆதரவு, பிறந்த வீட்டு கவுரவம், பிறந்த வீட்டிற்கு சென்றாலும் மகளை முழுதாக ஏற்றுக்கொள்ளாத பெற்றோரின் மனநிலை என எங்கு செல்வதென்றே தெரியாமல் குழப்பத்தில் சிக்கும் பெண்களே உயிரை மாய்த்துக்கொள்ளவும் செய்கிறார்கள்.
'கஷ்டம்னா வீட்டுக்கே வந்திருக்கலாம்ல' என பெண்ணில் இறப்புக்கு பிறகு அடித்துக்கொண்டு அழும் பெண் வீட்டார்கள் பலர், உண்மையில் அந்தப்பெண் வீட்டிற்கு வந்திருந்தால் முழுமனதாக ஏற்றுக்கொண்டு இருப்பார்களா? என்ற கேட்டால், அதற்கு இந்த சமூகம் என்ன பதில் வைத்திருக்கிறது. பிறந்த வீடே என்றாலும் திருமணத்திற்கு பின் அவர்கள் அப்பா வீட்டில் தங்கினால் அவர்களை பார்வையாலும் வார்த்தையாலும் ஒதுக்கித் தள்ளும் போக்குதான் இன்றைய சமூகமாக பெரும்பாலும் உள்ளது. இந்த மனநிலைதான் எந்தப் பிரச்னை வந்தாலும் அவர்களை கணவர் வீட்டோடு இருக்க வைக்கிறது. நினைத்தாலும் வெளியே வர விடாமல் அவர்களை தடுக்கிறது.
திருமண வாழ்க்கை மட்டுமல்ல. வாழ்க்கையின் எந்த நிலையாக இருந்தாலும் பொறுமையும், விட்டுக்கொடுத்துப்போகும் தன்மையும் தான் ஆரோக்கியமான அடுத்தக்கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பது உண்மைதான். மறுப்பதற்கு இல்லை. ஆனால் அனைத்துக்கும் உண்டு ஒரு எல்லை என்பதே இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. அந்த எல்லையை சரியாக இந்த சமூகம் உணர்ந்திருந்தால் உடல் முழுவதும் காயங்களுடன் கேரளாவின் விஸ்மயா ஏன் புகுந்த வீட்டிலேயே தங்கியிருக்க போகிறார்? ஏன் அதிகபட்சமாகத் தனது அம்மாவுடன் மட்டுமே அவரது உரையாடல் இருந்திருக்க போகிறது?
இங்கு யாருமே குழந்தை இல்லை. விவரம் தெரியும் வயதில் தான் பெண்கள் மணமேடையே ஏறுகிறார்கள். ஆணோ, பெண்ணோ அவர்களுக்கான எல்லை தெரியாமல் இல்லை. மனஸ்தாபங்களுக்கெல்லாம் பள்ளிக்குழந்தை போல பெண்கள் கம்ளைண்ட் செய்யப்போவதில்லை. இவற்றையெல்லாம் கடந்து புகாராகவும், பிரச்னையாகவும், அழுகையாகவும் வரும் பெண்களை, குடும்பத்தினர் எப்படி கையாள்கிறார்கள் என்பதில் இருக்கிறதுதான் அடுத்தக்கட்டம். அனைத்தையும் தாண்டி மனம் நொந்து வரும் பெண்களிடத்தில் அவரின் பெற்றோர் காட்டும் அன்பும், ஆதரவும் தான் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. அதுவரை வரதட்சணை மட்டுமல்ல ’பொறுத்துப்போ.. இதான் ரியாலிட்டி’ என்ற வார்தைகளும் உயிர்பலி வாங்கிக்கொண்டேதான் இருக்கும்.