மேற்கு வங்க மாநிலத்தில் செயல்படும் ஒரு பள்ளியின் ஆண்டு விழாவின் போது மாணவிகள் துண்டை கட்டிக்கொண்டு ஆபாச நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஜீபன் ஜோதி மாதிரிப் பள்ளியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. பொதுவாக பள்ளிகளில் ஆண்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்போது அதில் நடனம் தொடங்கி பலவிதமான மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வண்ணம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். பள்ளிகள் மாணவர்களின் ஒழுக்கத்தையும், எதிர்கால வாழ்க்கையையும் செதுக்கும் இடம் என்பதால் அதில் எந்தவித சமரசமும் செய்யப்படுவதில்லை. குறிப்பாக ஆடை தொடங்கி பேசும் சொற்கள் வரை கண்ணியம் பேணப்படுபவது வழக்கம். இது கல்லூரி, அலுவலக நிகழ்ச்சிகளிலும் நமக்கான அடித்தளமாக அமையும். 

ஆனால் இணையத்தில் பரவும் இந்த வீடியோவில், மாணவிகள் குழு ஒன்று துண்டை உடலில் சுற்றிக் கொண்டு பாலிவுட் பாடல் ஒன்றுக்கு ஆடுகிறார்கள். பல வயதுடைய மாணவ, மாணவியர்கள் அந்த நிகழ்ச்சியை ஆர்வமுடம் பார்வையிடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. அந்த மேடையின் பின்னால் உள்ள பேனரில்  பள்ளியின் பெயர் தெளிவாக இடம்பெற்றுள்ளது. அந்த பெண்கள் தங்கள் ஆடைகளின் மேல் துண்டை சுற்றிக்கொண்டு ஆடினாலும் இந்த வீடியோ பார்ப்பவர்களை ஒருபுறம் அதிர்ச்சியிலும், மறுபுறம் என்ன மாதிரியான நிலைக்கு சமூகம் சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வியையும் எழுப்பும் வகையில் அமைந்துள்ளது. 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் பலரும் அந்த மாணவிகளுக்கும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

துண்டு நடனம் என்ற பெயரில் இந்த வீடியோவானது பகிரப்பட்டு வருகிறது. ஒரு பள்ளி கலாச்சார நிகழ்ச்சியில் இதுபோன்ற ஆபாச நடனம் ஏன் அனுமதிக்கப்பட்டது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கல்வித்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளனர். 

அதேசமயம் இந்த சம்பவத்திற்கு சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். குடும்பங்கள் பார்க்கும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இதேபோன்ற காட்சிகள் பெரும்பாலும் காட்டப்படும்போது நாம் எதுவும் சொல்வதில்லை. எனவே இந்த விஷயத்தில் மாணவர்களை மட்டும் குறை கூறுவது நியாயமாக இருக்காது என சப்போர்ட் செய்யும்படியான கருத்துகளை தெரிவித்துள்ளனர். மேலும் உள்ளூர் கிளப் ஒன்று இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கலாம் என்றும், ஸ்பான்சர் செய்ததால் பள்ளியின் பேனர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த வீடியோ தொடர்பான விசாரணையானது நடந்து வருகிறது.