மதுரை மற்றும் திருச்சியில் புதிய டைடல் பூங்கா!

மதுரை, திருச்சியில் வரும் 13ம் தேதி புதிய டைடல் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மதுரையில் 9.97 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.289 கோடி மதிப்பீட்டிலும், திருச்சியில் 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.315 கோடி மதிப்பீட்டிலும் டைடல் பார்க் அமைய உள்ளது. இதன் மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

வரி வசூல் செய்ய சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ரூ.5,000 மேல் சொத்துவரி நிலுவையில் வைத்துள்ள 2 லட்சம் பேருக்கு QR code நோட்டீஸ் தர முடிவு. QR code மூலம் நிலுவையில் உள்ள வரியை செலுத்தலாம். நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாமல் உள்ளவர்கள் மீது விரைவில் நடவடிக்கை.

 

ஆட்டோவில் இளம்பெண் கடத்தல் - இருவர் கைது

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, இளம் பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்ச்செல்வன், தயாளன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தயாளன் சரித்திர பதிவேடு குற்றவாளி என விசாரணையில் தகவல். கடந்த 3ம் தேதி இச்சம்பவம் நடைபெற்றது, குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன

தொடர் உச்சத்தில் தங்கம் விலை

தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, ஆபரண தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 63 ஆயிரத்து 440 ரூபாயை எட்டியுள்ளது. அதாவது ஒரு கிராம் தங்கத்தின் விலை 25 ரூபாய் அதிகரித்து, 7 ஆயிரத்து 930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, பிரதமர் மோடி இன்று மக்களவையில் பேச உள்ளார். இதில் வேலைவாய்ப்பின்மை, கும்பமேளா உயிரிழப்பு உள்ளிட்ட, எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு, பிரதமர் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் பாஜக ஆட்சி?

டெல்லி சட்டமன்ற தேர்தலில் சுமார் 60% வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து, வரும் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன. இதில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் திமுக ஆர்பாட்டம்

யு.ஜி.சி வரைவு அறிக்கையை திரும்பப் பெறக்கோரி தி.மு.க மாணவரணி சார்பில் டெல்லியில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். யு.ஜி.சி வரைவு அறிக்கையை நிரும்பப்பெறக்கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 9ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார்.

வங்கதேசத்தில் வன்முறை

வங்கதேச மக்களிடையே, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா காணொலி வாயிலாக உரையாற்ற இருப்பதாக தகவல் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், டாக்காவில் உள்ள முஜிபுர் ரகுமான் நினைவு இல்லத்தை சேதப்படுத்தி தீ வைத்தனர். பல போராட்டக்காரர்கள் வீட்டின் இரண்டாவது மாடியில் ஏறி, கடப்பாரைகள் மற்றும் மரக் கட்டைகளைப் பயன்படுத்தி ஷேக் முஜிபுர் ரகுமானின் உருவப்படத்தை சேதப்படுத்தினர்.

ஏலம்போகாத ஆன் சாங் சூகியின் வீடு

மியான்மரில் ராணுவ ஆட்சியால் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ஆங் சான் சூகியின் சொத்துகளை விற்று, அந்நாட்டு அரசு பொருளாதார இழப்பை சரி செய்து வருகிறது. அந்த வகையில் ராணுவ நெருக்கடி நிலையின்போது ஆங் சான் சூகி அடைக்கப்பட்டிருந்த வீட்டை ஏலத்தில் எடுக்க யாரும் முன்வரவில்லை. இதனால் அந்த வீட்டை ஏலம் விடும் ராணுவத்தின் முயற்சி நான்காவது முறையாக தோல்வியடைந்துள்ளது.

இந்தியா Vs இங்கிலாந்து ஒருநாள் தொடர்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது. நாக்பூரில் பிற்பகல் ஒரு மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. முன்னதாக இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.