டெல்லி புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின்


மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக, முதலமைச்சர் ஸ்டாலின் விமானம் மூலம் டெல்லி விரைந்துள்ளார். உடன் பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் சென்றுள்ளனர். முன்னதாக மன்மோகன் சிங்கின் மறைவிற்காக தமிழ்நாட்டில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.


சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை


அண்ணா பல்கலை., மாணவிக்கு பாலியல் தொல்லை நடந்தது தொடர்பாக,  தமிழ்நாடு அரசைக் கண்டித்து, கோவையில்  அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். வெற்றிவேல் வீரவேல் என சுற்றி இருந்தவர்கள் கோஷமிட்டனர். சில அடிகளுக்குப் பிறகு அவர்கள் அண்ணாமலையை தடுத்து நிறுத்தினர்.



உயர்கல்வி அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு


அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை நிகழ்ந்தது தொடர்பாக, உயர்கல்வி அமைச்சர் கோவி. செழியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் மனைவி அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை செய்து வருகிறார். அவரை விட்டுச் செல்லவும், அழைத்துச் செல்லவும் அடிக்கடி பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்து சென்றுள்ளார்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


தங்கம் விலை உயர்வு


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 200 ரூபாய் உயர்ந்து, 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது.  


அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைபாடு காரணமாக, தனது 92வது வயதில் நேற்று இரவு காலமானார். அவருக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


நாளை இறுதிச்சடங்கு


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். முழு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


வருமான வரி கணக்கு தாக்கல்


2023-24 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட அல்லது தாமதமான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. தவறினால் அபராதத்தை எதிர்கொள்வதோடு, பல சலுகைகளையும் இழக்க நேரிடும்.


உயிர் தப்பினார் WHO தலைவர்


ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில்,  WHO அமைப்பு தலைவர் நூலிழையில் உயிர் தப்பினார். அவர் டெட்ரோஸ் வந்திருந்தபோது சனா விமான நிலையம் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் WHO அமைப்பு தலைவருக்கு சில மீட்டர் தூரத்தில் இருந்த 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது 


கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் 4 பேர் பலி


அமெரிக்கா நியூ ஹாம்ப்ஷைர் மாகாணத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாரானபோது விஷவாயு தாக்கி 4 பேர் பலி ஆகினர். வெப்பமூட்டும் சாதனத்தில் இருந்து கார்பன் மோனாக்சைடு கசிந்ததால் 4 பேர் பலியானார்கள்.


இந்திய அணி திணறல்


இந்திய அணிக்கு எதிரான நான்கவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி 474 ரன்களுக்கு ஆல் - அவுட்டானது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 3 ரன்களிலும், கே.எல். ராகுல் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.