பத்திரிகையாளர்கள் தினம் - முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தேசிய பத்திரிகையாளர்கள் தினமான இன்று உண்மையையும் பொறுப்புக்கூறலையும் நிலைநிறுத்தும் ஊடகவியலாளர்களின் இடைவிடாத முயற்சிகளை நாங்கள் மதிக்கிறோம். அதிகரித்து வரும் சகிப்பின்மை சகாப்தத்தில், அவர்களின் தைரியம் ஜனநாயகத்தின் கடைசி தற்காப்பாக உள்ளது. பயம் அல்லது தயவால் கட்டுக்கடங்காமல் பத்திரிகைத் துறை செழிக்க வேண்டும். நமது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம்” என தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவன உரிமம் ரத்து
குன்றத்தூரில் வீட்டில் எலி மருந்து வைத்ததில் 2 குழந்தைகள் பலியான விவகாரத்தில், தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அறைகளில் எலி மருந்தை வைக்கும்படி தவறாக வழிகாட்டுதல் வழங்கியதை அடுத்து நடவடிக்கை. இன்னும் 2 நாட்களில் அந்நிறுவனத்திற்கு சீல் வைக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மீண்டும் குறைந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 55 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் விலை 10 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 935 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 10 பைசாக்கள் குறைந்து 98 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
வாக்காளர் சேர்க்கை முகாம்
தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் புதிய வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்ய விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் பகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களில், இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.
உத்தரபிரதேசத்தில் 10 குழந்தைகள் உயிரிழப்பு
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்த நிலையில், 35 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கினறன்.
செல்ல பிராணிகளுக்கு ரயிலில் ஆன்லைன் முன்பதிவு
ரயிலின் AC முதல் வகுப்பு பெட்டிகளில் செல்ல பிராணிகளை உடன் அழைத்துச் செல்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே நிர்வாகம் தொடங்கிருப்பது பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரயில் பயணத்திற்கு 3 மணி நேரம் முன்பே செல்லப்பிராணியை ரயில் நிலையம் அழைத்துச்செல்ல வேண்டும், அனைத்து தடுப்பூசிகளையும் செலுத்திய சான்றிதழ்களைக் காண்பித்தல் அவசியம்.
இலங்கை தேர்தலில் அதிபர் கட்சி அபார வெற்றி
இலங்கை பொதுத் தேர்தலில், அதிபர் அனுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி. இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக 2/3 பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ளது என்பிபி கூட்டணி! தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் யாழ்ப்பாணத்தில் என்பிபி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அங்கு தமிழர் கட்சி அல்லாத தேசிய கட்சி அமோக வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறை.
தொடரை வென்ற இந்திய அணி
தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி, 3-1 என்ற கணக்கில் வென்றது. கடைசி டி20 போட்டியில் 284 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா, 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் சதம் விளாசி, பல புதிய சாதனைகளை படைத்தனர்.
ரோகித் சர்மாவிற்கு ஆண் குழந்தை
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரோகித்திற்கு 6 வயதில் சமைரா என்ற பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.