”நலமாக இருக்கிறேன்” - மருத்துவர் பாலாஜி வீடியோ
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி, தான் நலமாக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பரிசோதனையில் தனது இதயம் சீராக இயங்குவது சோதனையில் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
தமிழ்நாட்டில் முதலீடு - சுவீடன் நிறுவனங்கள் ஆர்வம்
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய சுவீடனைச் சேர்ந்த டிரெல்போர்க் மெரைன் சர்வீசஸ், சாப், கேம்ஃபில், ஐகியா ஆகிய 4 நிறுவனங்கள் விருப்பம் கொண்டுள்ளதாக, அந்நாட்டு தூதர் ஜான் திஸ்லெஃப் தெரிவித்துள்ளார். ஏற்கனவே செயல்பட்டு வரும் சுவீடன் நிறுவனங்களில் சில, தங்களது தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை கிடுகிடு சரிவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து 55 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் விலை 110 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 935 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 11 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,280 சரிந்துள்ளது.
ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை சாதனை
சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். மார்ட்டினின் மருமகனும், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜூனாவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் மோசமான காற்று மாசுபாடு
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தரக் குறியீடு (AQI) 432 ஆக பதிவாகியுள்ளது. இது "கடுமையான” வகையின் கீழ் வருகிறது. காற்றின் தரம் 'மிகவும் மோசமான' பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதியில் இரண்டாவது நாளாக இன்றும் காலையில் அடர்ந்த மூடுபனி நிலவியது. இதனால் மக்கள் கடுமையாக அவதியுற்றனர்.
பெண்களின் திருமண வயது உயர்கிறதா?
இந்தியாவில் ஆண்களைப் போலவே பெண்களின் திருமண வயதையும் 21ஆக உயர்த்துவது குறித்து, வருகிற 22ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற நிலைக்குழுவில் விவாதிக்கப்படவுள்ளது. இருபாலருக்கும் திருமண வயது 21ஆக இருக்க வழிவகை செய்யும் மசோதா 2021ம் ஆண்டே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு தற்போது மசோதா காலாவதி ஆன நிலையில் விவாதிக்கப்படவுள்ளது.
பைடனை சந்தித்த ட்ரம்ப்
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்பை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து, அதிபர் பைடன் விருந்து அளித்து கவுரவித்தார். அப்போது அதிகார மாற்றம் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் நடப்பது உறுதி செய்யப்படும் என்றும் அது குறித்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று பைடன் உறுதியளித்துள்ளார்.
இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல்
இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. 225 இடங்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள். மீதமுள்ள 29 இடங்கள், கட்சிகள் தேசிய அளவில் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும். அதிபர் அனுர திசநாயகே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற 113 இடங்களை அவரது கட்சி கைப்பற்ற வேண்டும்.
திலக் வர்மா சாதனை
தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் திலக் வர்மா 56 பந்துகளில் 107 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற அணிக்கு எதிராக டி20 போட்டியில், அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.
தமிழக அணி தோல்வி
தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதியில், நேற்று தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேச அணிகள் மோதின. இதில் 1-3 என்ற கணக்கில் தோல்வியுற்று தமிழக அணி போட்டியிலிருந்து வெளியேறியது. மற்ற காலிறுதி போட்டிகளில் மணிப்பூர் , ஹரியானா, ஒடிசா அணிகள் வெற்றி பெற்று அரையிறுதி தகுதி பெற்றன .