இந்தியாவின் சிறந்த கட்டமைப்பு வசதிகளில் நெடுஞ்சாலையும் ஒன்று. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் நெடுஞ்சாலைகள் சிறப்பாக இருக்கிறது. மத்திய அரசு நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் விதமாக சுங்கச்சாவடிகளை அமைத்து வாகன ஓட்டிகளிடம் சுங்கக்கட்டணம் வசூலித்து வருகிறது.


சுங்கக்கட்டணம் உயர்வு நள்ளிரவு முதல் அமல்:


ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சுங்கக்கட்டணங்களை மத்திய அரசு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் தொடர்ந்து வேதனையை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி முதல் நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.


ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட காரணத்தால் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மக்களவைத் தேர்தலின் 7 கட்ட வாக்குப்பதிவும் நேற்றுடன் நிறைவு பெற்றதால், இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. இதன்படி, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கக்கட்டணம் ரூபாய் 5 முதல் ரூபாய் 20 வரையிலும், மாதாந்திர சுங்கக்கட்டணம் ரூபாய் 100 முதல் ரூபாய் 400 வரையிலும் உயர்த்தப்பட உள்ளது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


வாகன ஓட்டிகள் வேதனை:


நாடு முழுவதும் மொத்தம் 1228 சுங்கச்சாவடிகள் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் 55 சுங்கச்சாவடிகள் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான சுங்கச்சாவடிகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. தொடர்ந்து சுங்கக்கட்டணம் உயர்ந்து கொண்டே போவது வாகன ஓட்டிகள், மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.