ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் பணிபுரியும் தங்கள் ஊழியர்களை e-Shram தளத்தில் பதிவு செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.


ஆன்லைன் டெலிவரி மற்றும் பகுதி நேர வேலைகள்:


கடந்த 2021-22ஆம் ஆண்டு, இந்தியாவில் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களிலும் பகுதி நேரமாக வேலை செய்வோரின் எண்ணிக்கை 7.7 மில்லியனாக (77 லட்சம் பேர்) இருந்தது. இது வரும் 2029-30ஆம் ஆண்டுக்குள் 23.5 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வேலைவாய்ப்புகளை வழங்கி வந்தாலும், அதில் ஈடுபடும் ஊழியர்கள் சுரண்டலுக்கு உள்ளாவதாகவும் சமூக பாதுகாப்பு இன்றி இருப்பதாகவும் தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், e-Shram தளத்தில் தங்களையும் தங்கள் ஊழியர்களையும் பதிவு செய்யுமாறு ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கும் பகுதி நேர பணிகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


இப்படி கோரிக்கை விடுதிருப்பதன் மூலம் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பகுதி நேர ஊழியர்களுக்கும் சமூக பாதுகாப்பு நன்மைகளை விரிவுபடுத்துவதில் மற்றொரு பெரிய நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது.


e-Shram தளத்தில் பதிவு செய்வது முக்கியம்:


அந்த தொழிலாளர்களுக்கும் சமூக நலத் திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு e-Shram தளத்தில் பதிவு செய்வது முக்கியமானது. அதே நேரத்தில் இத்தகைய பதிவு பயனாளிகளின் துல்லியமான பதிவேட்டை உருவாக்க உதவும்.


இந்த செயல்முறையை வழிநடத்த,  தொழிலாளர்கள் சம்பந்தமான தகவல்களை பதிவு செய்தல் மற்றும் அவர்களின் தரவைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பொறுப்புகளை கோடிட்டுக் காட்டும் நிலையான இயக்க நடைமுறையுடன் (எஸ்.ஓ.பி) அமைச்சகம் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.


பதிவு செய்தவுடன்,  நடைபாதை தொழிலாளர்கள்  உலகளாவிய  கணக்கு எண்ணைப் (யு.ஏ.என்) பெறுவார்கள், இது முக்கிய சமூக பாதுகாப்பு நன்மைகளை அணுக அனுமதிக்கும். மத்திய அரசு, ஏ.பி.ஐ  ஒருங்கிணைப்புக்கான சோதனையை வெற்றிகரமாக முடித்து, பதிவு செயல்முறையை முன்னெடுத்து வருகிறது.


இந்தக் கூட்டு முயற்சி  செயலித் தொழிலாளர்களின் முழு நலனை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வழிகாட்டுதல்கள் மூலம், வேலை மற்றும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட தொழிலாளர்களின் விவரங்களைத் தவறாமல் புதுப்பிக்குமாறு அவர்களை வேலையில் அமர்த்துவோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


துல்லியமான பதிவேடுகளைப் பராமரிக்க ஏதுவாக,  எந்தவொரு தொழிலாளியும்  வேலையிலிருந்து வெளியேறியிருந்தால், உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் மற்றும்  பணியில் அமர்த்துபவர்களை இணைப்பதற்கு உதவுவதற்காக, தகவலை வழங்குவதற்கும், பதிவுக்கு வழிகாட்டுவதற்கும், செயல்பாட்டின் போது ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் கட்டணமில்லா உதவி எண் (14434) அமைக்கப்பட்டுள்ளது.


இந்த முக்கியமான முயற்சியில் அவர்களை ஊக்குவிக்கவும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் 18.09.2024 அன்று இத்தகைய தொழிலாளர்களை வேலையில் அமர்த்துபவர்களுடன் ஒரு சந்திப்பை  நடத்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.