மாதத்துக்கு ஓரிரு முறை மட்டுமே கணவன் குளித்து வந்த நிலையில், துர்நாற்றத்தைப் பொறுக்க முடியாத மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.


கங்கா ஜலம் தெளித்துக்கொள்ளும் ராஜேஷ்


உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவை சேர்ந்த நபர் ராஜேஷ். இவர் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே குளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ராஜேஷ் கங்கை நதியில் இருந்து தண்ணீரை எடுத்து வாரத்திற்கு ஒரு முறை தன் உடல் முழுவதும் தெளித்துக் கொள்வார். இதனால் தான் சுத்தமாகி விடுவதாக ராஜேஷ் நம்பி உள்ளார்.


40 நாட்களில் 6 முறை மட்டுமே குளியல்


திருமணம் செய்துகொண்ட பிறகும், இதே வழக்கம் தொடர்ந்துள்ளது. ஆனாலும் மனைவியின் வற்புறுத்தல் காரணமாக, திருமணமாகி 40 நாட்களில் 6 முறை மட்டுமே குளித்துள்ளார். மனைவி பல முறை கூறிப் பார்த்தும் ராஜேஷ் கேட்கவில்லை.


இதனால் அவரது உடலின் துர்நாற்றத்தை சகித்துக்கொள்ள முடியாமல், தன் தாய் வீட்டுக்கே மனைவி சென்றுவிட்டார். அங்கிருந்து விவாகரத்து முடிவை எடுத்துள்ளார்.


இதை அடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் காவல் துறையினரிடம் வரதட்சணை துன்புறுத்தல் புகார் அளித்து விவாகரத்து கோரினர்.


இனி ராஜேஷுடன் வாழ விரும்பவில்லை


ஆக்ராவில் உள்ள குடும்ப நல மைய ஆலோசகர் இருவரும் உளவியல் ஆலோசனை வழங்கினார். அதைத் தொடர்ந்து, ராஜேஷ் மனம் திருந்தி தினமும் குளித்து, சுத்தமாக இருப்பேன் என்று உறுதி அளித்தார். ஆனாலும், அந்தப் பெண் இனி ராஜேஷுடன் வாழ விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த தம்பதி மீண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி ஆலோசனை மையத்திற்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


ஆக்ராவில் இத்தகைய விநோத விவாகரத்து சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குர்க்குரே வாங்கி வரவில்லை என்று கோபப்பட்டு, மனைவி விவாகரத்து கோரி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் இத்தகைய சம்பவங்களுக்குப் பின்னால், நீண்ட நாளைய மன அழுத்தமும் குறையும் வருத்தமும் இருந்திருக்கலாம் என்பதும் அதன் ஒட்டுமொத்த விளைவாக விவாகரத்து முடிவும் எடுக்கப்படலாம் என்பதும் நினைவுகூரத் தக்கது.