தமிழ்நாடு முழுவதும் உள்ள 20 சுங்கச் சாவடிகளில் இன்று அதிகாலை முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு நெடுஞ்சாலைகளில் 450க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களில் அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகின்றன. 


 


தமிழ்நாட்டில் மொத்தம் 53 சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சுங்கச் சாவடிகளில் சிலவற்றில் ஆண்டிற்கு ஒரு முறை சுங்க கட்டணம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு சில சுங்கச் சாவடிகளுக்கு ஏப்ரல் 1ஆம் தேதியும், மற்ற சுங்கச் சாவடிகளுக்கு செப்டம்பர் 1ஆம் தேதியும் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. 


 


இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 20 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு இன்று அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி விக்கிரவாண்டி, திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, கொடை ரோடு, திருண்டுக்கல் புறவழிச்சாலை, சமயநல்லூர், மனவாசி, திருச்சி, கரூர், மேட்டுப்பாடி, சேலம், உளுந்தூர்பேட்டை, ஓமலூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தும்பிப்பாடி, பொன்னம்பலப்பட்டி,திருச்சி-திண்டுக்கல், புதூர் பாண்டியபுரம், மதுரை-தூத்துக்குடி, சமயபுரம்-பாடலூர்-திருச்சி, செங்குறிச்சி-உளுந்தூர்பேட்டை-பாடலூர் உள்பட 20 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 


 


இந்தக் கட்டண உயர்வால் வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. உதாரணமாக விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் கார், ஜீப் வாகனங்களுக்கு 90 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இன்று முதல் அந்தக் கட்டணம் சுமார் 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்தக் கட்டணம் 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் இந்த சுங்கச்சாவடியில் பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களுக்கான கட்டணமும் மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது.


 


அதன்படி கனரக வாகனங்களுக்கு நேற்று வரை 310 ரூபாயாக கட்டணம் இருந்தது. அந்தக் கட்டணம் தற்போது 355 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு பலருக்கு சிரமத்தை உண்டாக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.