கேரளாவில் மனைவியை பாம்பைவிட்டு கடிக்கவைத்து கொலை செய்த வழக்கில் கணவன் சூரஜ் குற்றவாளி என கொல்லம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனை விபரங்கள் வரும் 13ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த 25 வயது மாற்றுத்திறனாளி  பெண்ணான உத்ராவை பத்தணம்திட்டா மாவட்டம் பறக்கோடு பகுதியைச் சேர்ந்த சூரஜ் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின்போது 112 பவுன் நகை, மாருதி ஸுசுகி பெலினோ கார் என வரதட்சணை கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த வரதட்சணைகள் போதாது என மாதம்தோறும் பெண் வீட்டாரிடம் இருந்து பணம் வாங்கியுள்ளார் சூரஜ். அதிலும் திருப்தி அடையாத சூரஜ், மனைவியைக் கொலை செய்துவிட்டு வேறு திருமணம் செய்யத் திட்டமிட்டார். 


முதலில் தனது வீட்டில் வைத்து ஒரு பாம்பை விட்டு மனைவியைக் கடிக்க வைத்தார். அதில் உத்ரா உயிர் தப்பிவிட்டார். பாம்பு கடித்து கொல்லத்தில் உள்ள தனது தாய் வீட்டில் சிகிச்சையில் இருந்த மனைவியைக் காண கருநாகப்பாம்புடன் சென்றார் சூரஜ். 52 நாட்கள் சிகிச்சையில் இருந்த உத்தராவை அங்கேயும் பாம்பைக் கடிக்க வைத்து மனைவியைக் கொலை செய்துள்ளார். ஆனால் அக்கம் பக்கத்தாரிடம் உத்ராவுக்கு பாம்புதோஷம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதனை நம்பாத உத்ராவின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து உத்ராவின் மரணத்திற்கு 2 வாரங்களுக்கு பிறகு சூரஜிடம் பாம்பை வழங்கியவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு போலிசில் சரணடைந்தார். இந்நிலையில் போலிசிடம் வசமாக சிக்கிக் கொண்டார் சூரஜ். வரதட்சணைக் கேட்டு உத்ராவை கொலை செய்தது உறுதியாகிய நிலையில் சூரஜின் பெற்றோர்கள், சகோதரி ஆகியோரையும் போலிசார் கைது செய்தனர்.


இந்நிலையில் இந்த வழக்கில், தற்போது கொல்லம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னதாக பலத்த போலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளோடு நீதிமன்றம் அழைத்து வரப்பட்டான் சூரஜ். நீதிமன்ற தீர்ப்பைக் கேட்பதற்காக பெருங்கூட்டமே நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்தது. நீதிமன்றத்திற்கு உத்ராவின் தந்தை, சகோதரி ஆகியோரும் வந்திருந்தனர். இதனையடுத்து கணவன் சூரஜ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர் அரிதினும் அரிதான வழக்காக இதனை எடுத்துக் கொண்டு சூரஜுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.


கேரளத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வரதட்சணைக் கொடுமையால் கொலை மற்றும் தற்கொலைகளால் 66 பெண்கள் இறந்துள்ளனர். 2016 முதல் கடந்த ஏப்ரல் வரை வரதட்சணைக்காகப் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டதாக 15,143 வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது..