மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2021ம் ஆண்டுக்கான, மருத்துவத்துக்கான நோபல் பரிசு
அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பம், உடல் வலியை தொடாமல் உணரும் சென்சார் பகுதியை கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேடான நிதி முதலீடுகளில் சச்சின் உள்ளிட்ட பல இந்தியர்கள்
வெளிநாடுகளில் முறைகேடாக முதலீடு செய்து, சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பதாகப் பண்டோராஸ் பேப்பர் (Pandora's Papers) மூலமாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப் பட்டியலில், அனில் அம்பானி, நீரவ் மோடியின் தங்கை, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
நீட்: ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12-ல் நடைபெற்றதை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. அத்துடன் மனுதாரருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது உச்சநீதிமன்றம்.
நீட் தேர்வு: 12 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும் அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க வேண்டும் எனக் கோரியும் மேற்கு வங்கம், கேரளா உள்பட 12 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஆட்கொல்லி புலியின் கால்தடம் கண்டுபிடிப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினக்குடியில் சுற்றித்திரிந்த ஆட்கொல்லி புலியின் கால்தடத்தை சத்தியமங்கலம் முதுமலை காப்பக டைகர் என்னும் மோப்ப நாய் கண்டுப்பிடித்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை மசினகுடி - சிங்காரா வனப் பகுதியில் மரங்களில் ஏறி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
குறையும் கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் இன்று 1467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஓய்ந்தது உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை
தமிழகத்தில், வருகிற 6ஆம் தேதி நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தலில் வாக்கு சேகரிப்புக்கான பரப்புரை ஓய்ந்தது. இதையொட்டி தலைவர்களும் வேட்பாளர்களும் இறுதிகட்டப் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
கே.பி பூங்கா கட்டட விவகாரம்: நடவடிக்கை எடுக்க ஐஐடி குழு பரிந்துரை
புளியந்தோப்பு கே.பி பூங்கா அடுக்குமாடி குடியிருப்பை தரமற்ற முறையில் கட்டிய கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க ஐஐடி குழு பரிந்துரை செய்துள்ளது.
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணிநேரத்திற்கு தேனி, திண்டுக்கல்,தென்காசி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு. டெல்டா மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பிரியங்கா காந்தி கைது; நாளை காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் மீது காரை ஏற்றிக்கொன்றதாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு எதிராக நடந்த லக்கிம்பூர் வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்தும், சம்பவ இடத்துக்குச் செல்ல பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்தும் நாளை காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் என அறிவிப்பு
உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.45 லட்சம் நிவாரண உதவி
உயிரிழந்த 4 விவசாயிகளின் குடும்பங்களுக்கு 45 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டும் என்றும் உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.
ஆர்யன்கானை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது
ஏற்றம்கண்ட இந்திய பங்கு சந்தைகள்
முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்ததால் இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தைக் கண்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண்ணான சென்செக்ஸ் 534 புள்ளிகள் அதிகரித்தது.
பிரதமர் மோடியை சந்தித்தார் மத்திய இணையமைச்சர் எல். முருகன்
பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பிரதமருக்கு நினைவு பரிசாக திருக்குறள் புத்தகத்தை வழங்கினார் எல். முருகன்.
வெளியானது ‘அண்ணாத்த’ பாடல்:
ரஜினிக்காக, பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாடிய கடைசி பாடல் வெளியானது. அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.