அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் வெளிநாடுகளில் முறைகேடாக முதலீடு செய்து, சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பதாகப் பண்டோராஸ் பேப்பர் (Pandora's Papers) மூலமாக தகவல் வெளியாகியிருக்குறது. இந்தப் பட்டியலை சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalists-ICIJ) வெளியிட்டிருக்கிறது. 


14 சர்வதேச கார்ப்பரேட் பெருநிறுவனங்களிலிருந்து கசிந்த 1.9 கோடி கோப்புகள்தான் பண்டோரா ஆவணங்கள் எனக் கூறப்படுகிறது. 117 நாடுகளைச் சேர்ந்த 650க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களால் புலனாய்வு செய்யப்பட்டு, இந்த `பண்டோரா பேப்பர்ஸ்' தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. உலகில் உள்ள பெரும் பணக்காரர்கள் எல்லாம் எந்தெந்த வெளிநாட்டில் எவ்வளவு முதலீடுகளை ரகசியமாக, வரிஏய்ப்பாக  செய்துள்ளனர் என்பது தற்போது பண்டோராஸ்  பேப்பர்ஸ் மூலமாக அம்பலமாகியுள்ளது. 


 2016ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் (panama papers)வெளியாகி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப்பட்டியலும் வெளிநாடுகளில் முறைகேடாக முதலீடு செய்து வரி ஏய்ப்பு செய்திருந்தவர்களின் பட்டியல்தான். பனாமா பேப்பர்ஸ் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர் கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, டி.எல்.எஃப் நிறுவனத் தலைவர் கே.பி.சிங் மற்றும் அவருடைய 9 குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. பனாமா பேப்பர்ஸ், பாரடைஸ் பேப்பர்ஸ், லக்ஸ்லீக்ஸ், ஃபின்சென் ஃபைல்ஸ் போன்ற பெரும் ஆவணக் கசிவுகளின் வரிசையில் பண்டோரா பேப்பர்ஸும் இணைந்திருக்கிறது. 


 இந்நிலையில் தற்போது பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியாகியுள்ளது. பனாமா ஆவணங்களைப் புலனாய்வு செய்து வெளியிட்ட அதே பத்திரிகையாளர்களின் குழுதான் இந்த பண்டோரா பேப்பர் தொடர்பான ஆவணங்களுக்கும் புலனாய்வு செய்து தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தப் பட்டியலில், அனில் அம்பானி, நீரவ் மோடியின் தங்கை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கென்யா ஜனாதிபதி உஹுரு, செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரேஸ் பாபிஸ், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், பாப் இசை பாடகி ஷகிரா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எனப் பலரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த பண்டோரா ஆவணங்களில் குறைந்தது 380 இந்தியர்களின் பெயர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் குறிப்பாக விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகளில் சச்சின் சட்டவிரோதமாக முதலீடு செய்து நிறுவனம் ஒன்றைத் தொடங்கியதாகவும், பின்னர் பனாமா ஆவணங்கள் வெளியான பிறகு, மூன்று மாதங்கள் கழித்துத் தனது நிறுவனத்தை மூடிவிட்டதாகவும் பண்டோரா ஆவணங்களில் கூறப்பட்டிருக்கிறது.



அனில் அம்பானி வெளிநாட்டில் நிறுவனங்களின் மூலம் சுமார் 18 சொத்துக்களை வைத்துள்ளதாக பண்டோரா பேப்பர்ஸ் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி பார்மா நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரன் முசம்தர் ஷா-வின் கணவர் பெயரும் வரிஏய்ப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதேபோல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷேராஃபின் பெயரும் இடம்பெற்றுள்ளது.




பண்டோரா பேப்பர்ஸ் புலனாய்வில் இந்தியர்களைக் காட்டிலும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாகச் சிக்கியுள்ளனர். அந்நாட்டின் அரசியல் தலைவர்கள் அரசு அதிகாரிகள் உட்பட 700க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இதில் இடம்பெற்றுள்ளது. தற்போதைய பிரதமர் இம்ரான்கானின் பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது.  90 நாடுகளைச் சேர்ந்த 330க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளின் பெயர்கள் தங்களது சொத்து விவரங்களை மறைக்க வெளிநாடுகளில் முதலீடு செய்து வரி ஏய்ப்பு செய்ததாகவும் பண்டோராஸ் பேப்பர்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது.


இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களில் பெரும்பாலானோர் பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள், ஆப்பிரிக்காவின் சீஷெல் தீவு, ஹாங்காங், மத்திய அமெரிக்காவின் பெலிஸ் உள்ளிட்ட கடல்சார் தீவுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்து, வரிஏய்ப்பு செய்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.