தமிழ்நாடு
சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனத் தலைவர் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உட்பட 10 பேர் மேல்முறையீடு உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவிற்கு சிபிசிஐடி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
---
பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை (CUET) நடத்தும் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார்.
இந்தத் தீர்மானத்திற்கு பாஜகவைத் தவிர, எதிர்க்கட்சியான அதிமுக, பாமக, திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
---
பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர் அன்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.
அவர் அறிவித்த சில அறிவிப்புகள்:
அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச, படிக்க, எழுத, புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த, ரூ.30 கோடி மதிப்பீட்டில், 6029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும்"என பேசியிருக்கிறார்.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தை இன்னும் 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டிய தேவை உள்ளது.
150 கோடி மதிப்பீட்டில் 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.
2813 நடுநிலை பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
----
சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய அதிமுக பொதுக்குழுவின் தீர்மானம் செல்லும் என்று சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவையும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனையும் தேர்ந்தெடுத்துள்ளதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை கட்சியிலிருந்து நீக்கம் செய்வதாக அதிமுக தலைமை அறிவித்தது. இந்தத் தீர்மானத்தை எதிர்த்து, அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மறுபக்கம் மனுக்களை நிராகரிக்க அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தீர்மானம் செல்லும் தீர்ப்பளிக்கப்பட்டது.
-----
பொன்முடி அறிவித்த அறிவிப்புகள்
சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, “ பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்” என தெரிவித்து இருக்கிறார். இன்றைய காலக்கட்டத்துக்கும், தேவைக்கும் ஏற்ப புதிய பாடப்பிரிவுகளை கொண்டுவரவுள்ளதாக அவர் தெரிவித்தார்
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிறைக்கைதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும் என்றார்.
தமிழகத்தில் புதிதாக 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கட்டப்படும்.
16 கல்லூரிகளுக்கு 199.36 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படும்.
26 பாலிடெக்னிக் கல்லூரிகள்,55 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
---
தமிழ்நாட்டில் ஏப்ரல் 16 ம் தேதியான சனிக்கிழமையும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 14 ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு, ஏப்ரல் 15 ம் தேதி புனித வெள்ளி என்பதால் சனிக்கிழமையான ஏப். 16 ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையான ஏப். 16 ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை முடிந்து ஏப்ரல் 18 ம் தேதி பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.
உலகம்
பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரான 70 வயது ஷெபாஸ் ஷெரிப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் சில வாரங்களாக அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்த நிலையில், பிரதமராக இருந்த இம்ரான் கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அவரின் கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரான 70 வயது ஷெபாஸ் ஷெரிப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க் கட்சிகள் இல்லாத நிலையில், வாக்கெடுப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
----
உலகிம் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய பின்பு,அதன் நிர்வாக குழுவில் இணைய முடிவு செய்திருந்தார். இந்நிலையில், அவர் டிவிட்டர் நிர்வாக குழுவில் ஓர் உறுப்பினராக இணையும் முடிவை திரும்ப பெற்றுகொண்டார். எலான் மஸ்க் டிவிட்டர் நிர்வாக குழுவில் இணைய உள்ளார் என கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து ட்விட்டர் முதன்மை செயல் தலைவர் பாராக் அகர்வால் (Parag Agrawal), எலான் மஸ்க் டிவிட்டர் நிர்வாக குழுவில் உறுப்பினாராக அங்கம் வகிக்க மாட்டார் என்பதை உறுதி செய்துள்ளார்.
குவாங்டாங்கின் தலைநகரான குவாங்ஷூவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 27 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டது. இதில் 9 பேருக்கு அறிகுறிகள் இல்லை. இதனால், இந்நகரில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் பாதிப்பு 26,000-ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் இந்த நகரில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், குவாங்ஷூ நகரில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
----
போர் காரணமாக உக்ரைனின் பொருளாதாரம் 45.1 சதவீதமும், ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.2 சதவீதமும் சரிவைச் சந்திக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுகிழமை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “உக்ரைனை கடுமையாக எச்சரித்துள்ள உலக வங்கி, தொடர்ந்து போர் நீடித்தால் அது பெரிய பொருளாதார பாதிப்புக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளது.
----
இலங்கையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 2 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
அன்னிய செலவானி கையிருப்பு குறைந்த காரணத்தால், இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதிபர் பதவி விலகக்கோரி போராட்டங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் அங்கு ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2 லட்சமாக அதிகரித்துள்ளது.
சினிமா
தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தப்படத்தை தனுஷின் சகோதரரான செல்வராகவன் இயக்கியதோடு நடிக்கவும் செய்துள்ளார்.
---
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதை ப்ரோமோட் செய்யும் விதமாக 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் சன் டிவிக்கு நேர்காணல் கொடுத்திருக்கிறார். இதில் பல விஷயங்களை பற்றி அவர் பேசியிருக்கிறார்.
இந்த நேர்காணலை பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எடுத்து இருக்கிறார். வீட்டில் கார் இருக்கும் போது சட்டமன்ற தேர்தலின் போது ஏன் சைக்கிளில் வந்தீர்கள் என நெல்சன் கேட்க, அதற்கு பதிலளித்த விஜய், “வீட்டுக்கு பின்னாலேயே வந்த ஸ்கூல் இருந்தது. என் பையன் நியாபகம் வந்தது. அதனால் சைக்கிள் எடுத்து சென்றேன். வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் என் பையன் ஒன்னு கேட்டான். அது சைக்கிளுக்கு ஒன்னும் ஆகலயே... என்று” என்று பேசினார். இவை தவிர அரசியல் வருகை, ஆன்மீகம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் அதில் பேசினார்.
ஆர்.ஆர்.ஆர் படத்தை விட காஷ்மீர் ஃபைல்ஸ் படமே ரியல் கேம் சேஞ்சர் ( திருப்புமுனையாக அமைதல்) படம் என பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா கூறியிருக்கிறார்.
இது குறித்து பிரபல ஊடமான இந்தியா டுடேவிற்கு பேசிய அவர், “என்னை பொருத்தவரை ஆர்.ஆர்.ஆர், காஷ்மீர் ஃபைல்ஸ் ஆகிய இரு படங்களில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படமே ரியல் கேம் சேஞ்சர். இந்தப்படம் இயக்குநர்களுக்கு அதிகப்படியான நம்பிக்கையை கொடுத்திருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.
----
தன் திறமையான நடிப்பாலும், தனித்துவமிக்க கதைத் தேர்வு, தன் கருத்துக்களை துணிந்து பேசுவது உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்தியாவின் பிரபல முகமாக அறியப்படுபவர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். அவர் இன்ஸ்டாகிராமில் தனது குழந்தைப் பருவ நினைவுகளை அடிக்கடி பகிர்வது வழக்கம். சமீபத்தில் தான் 7ம் வகுப்பு படிக்கும் போது எழுதிய கவிதை ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
---
அஜித் நடிக்கும் 'ஏகே61' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்குகிறது.
வலிமை படத்தின் வெற்றிக்குப் பிறகு, அஜித் நடிக்கும் இந்தப்படம் 'ஏகே61 என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படத்தில் 3வது முறையாக அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் கூட்டணி இணைந்துள்ளது.
இந்தியா
ஆந்திராவில், 2019 ஆம் ஆண்டு முதல், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால், அமைச்சரவை மாற்றத்தில் தாமதம் ஏற்பட்டது. அப்படியிருக்க, தற்போது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 24 அமைச்சர்கள், சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இவர்களுக்கு பதிலாக, புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். இதில் நடிகை ரோஜா அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை ஒதுக்கப்பட்டது.
---
ராமர் பிறக்காமல் இருந்திருந்தால் பாஜக அரசியலில் எந்த பிரச்சினையை எழுப்பி வாக்கு வாங்கியிருக்கும், அந்த கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்து இருக்கும் என்று எண்ணி பார்த்து ஆச்சரியப்படுகிறேன் என மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே கூறினார்.
---
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேரா, மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என பேட்டி அளித்துள்ளார்.
இது குறித்து பேசியிருக்கும் அவர், “அரசியலை புரிந்து வைத்திருக்கிறேன். நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்பினால், அவர்களுக்கு சில மாற்றங்களை என்னால் கொண்டு வரமுடியுமென்றால், நிச்சயம் அரசியலுக்கு வரும் முடிவை எடுப்பேன்.” என்று பேசியுள்ளார்.
---
குஜராத்தின் பரூச்சில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
குஜராத் மாநிலம் பருச் பகுதியில் உள்ள இயற்கை ரசாயனம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் அந்த ஆலையில் பணியாற்றி வந்த 6 பணியாளர்கள் உயிரிழந்தனர்.
---