லடாக் ஒரு அழகான பிரதேசம். உண்மையில், இது நாட்டு மக்களின் விருப்பத்துக்குரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். ஆனால் சில சுற்றுலாப் பயணிகள் தங்கள் பொறுப்பற்ற நடத்தையால் அடிக்கடி அந்த இடத்தை குப்பைக் களமாக்கி விட்டுவிடுகிறார்கள். அண்மையில் மூன்று சுற்றுலாப் பயணிகள் தங்கள் எஸ்யூவி ரகக் காரை அழகிய பாங்காங் ஏரியின் நீரில் ஓட்டுவதைக் காட்டுகிறது.


இந்த வீடியோவை ஜிக்மத் லடாக்கி என்பவர் பகிர்ந்துள்ளார். இரண்டு சுற்றுலாப் பயணிகள் காரின் சன்ரூஃப்பில் தொங்கிக்கொண்டு கத்துவது போலவும் ஏரியின் வழியாக ஆடியபடியே எஸ்யூவி கார் வேகமாக பந்தயத்தில் செல்வதுபோலச் செல்வதையும் காட்டுகிறது. மூன்றாவது சுற்றுலாப் பயணி சிரித்துக் கொண்டே காரை ஓட்டிச் செல்வதையும் இதில் காணலாம்.


மற்றொருபக்கம், மடிக்கக்கூடிய நாற்காலிகள் மற்றும் ஒரு மேஜையில் மது பாட்டில்கள், தண்ணீர் மற்றும் சிப்ஸ் பாக்கெட்டுகள் சிதறிக் கிடப்பதையும் வீடியோ காட்டுகிறது.






“இன்னொரு வெட்கக்கேடான வீடியோவை மீண்டும் பகிர்கிறேன். இத்தகைய பொறுப்பற்ற சுற்றுலாப் பயணிகள் லடாக்கைக் கொல்கிறார்கள். உங்களுக்கு தெரியுமா? லடாக்கில் 350க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன மற்றும் பாங்காங் போன்ற ஏரிகள் பல பறவை இனங்களின் தாயகமாகும். இதுபோன்ற செயல் பல பறவை இனங்களின் வாழ்விடத்தை ஆபத்தில் ஆழ்த்தும்,” என்று ஜிக்மத் லடாக்கி வீடியோவைப் பகிரும்போது குறிப்பிட்டுள்ளார். வீடியோ முதலில் வெளியிடப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தின் இணைப்பையும் அவர் வெளியிட்டார். வீடியோ இப்போது அந்தப் பக்கத்திலிருந்து அகற்றப்பட்டது, ஆனால் மற்றொரு வீடியோ பகிரப்பட்ட நிலையில் அது அதே ஆடி காரைக் காட்டுகிறது.


லடாக்கில் இருந்து வெளியான இந்த வீடியோ வைரலான நிலையில் ட்விட்டரில் பலரைக் கோபப்படுத்தியுள்ளது.


“இது முட்டாள்தனத்தி உச்சம்!! முழுமையான முட்டாள்தனம், ”என்று ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார். "இந்த குண்டர்கள் லடாக்கிற்குள் நுழைவதை ஒட்டுமொத்தமாகத் தடை செய்ய வேண்டும்" என்று மற்றொரு பயனர் கருத்துத் தெரிவித்து, லடாக் மற்றும் ஹரியானா காவல்துறையை அதில் டேக் செய்துள்ளார்.


ஆடி எஸ்யூவி ஹரியானா பதிவு எண்ணைக் கொண்டிருந்ததால் ஹரியானா காவல்துறையின் கவனத்திற்கு இந்த வீடியோ கொண்டுசெல்லப்பட்டுள்ளது.


இந்த வீடியோவை இதுவரை 5 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.