பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்ல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் என்பவர் திட்டம் தீட்டி இருக்கிறார். கடந்த 2018ஆம் ஆண்டு, அவரது முன்னாள் உதவியாளர் சம்பத் நெஹ்ரா கைது செய்யப்பட்டதையடுத்து இந்த திடுக்கிடும் தகவல் வெளியானது.
இந்தாண்டு மே மாதம், பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா கொலை செய்யப்படுவதற்கு முன்பே, சல்மான் கானை கொல்ல பிளான் 'பி' ஒன்றை வைத்திருந்தது தற்போது வெளியாகியுள்ளது. இந்த செய்தியை பஞ்சாப் மற்றும் டெல்லி காவல்துறை அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர்.
கோல்டி ப்ரார் - லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலை சேர்ந்த கபில் பண்டிட்தான் இந்தத் திட்டத்தை முன்னின்று தீட்டியவர் ஆவார்.
இவர், சமீபத்தில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் டெல்லி மற்றும் பஞ்சாப் காவல்துறையின் சிறப்புப் பிரிவின் கூட்டு நடவடிக்கையால் கைது செய்யப்பட்டார்.
பண்டிட் மற்றும் அவரது கூட்டாளிகளான சந்தோஷ் ஜாதவ் மற்றும் சச்சின் பிஷ்னோய் தாபன் ஆகியோர் மும்பைக்கு அருகிலுள்ள பன்வெல் என்ற இடத்தில் சல்மான் கானுக்கு சொந்தமான ஒரு பண்ணை வீட்டை வேவு பார்பதற்காக ஒரு அறையை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
மும்பையில் இருந்து பண்ணை இல்லத்திற்குச் செல்லும் அதே சாலையில்தான் அவர்களின் மறைவிடமும் இருந்தது. மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக அவர்கள் அங்கேயே தங்கியிருந்ததாக காவல்துறை கூறியுள்ளது. அவர்கள் அனைவரிடமும் சிறிய ஆயுதங்கள் மற்றும் கைத்துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. அதை அவர்கள் சல்மான் கானை தாக்க பயன்படுத்த திட்டமிட்டனர்.
சல்மான் கானின் கார் விபத்து வழக்கில் இருந்து, அவரது கார் பொதுவாக மிதமான வேகத்தில் இயக்கப்படுவது என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. சல்மான் கான் பன்வெல்லில் உள்ள தனது பண்ணை வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம், அவர் வழக்கமாக தனது மெய்க்காப்பாளர் ஷேராவை மட்டுமே தன்னுடன் வைத்திருப்பார் என்பதும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.
அவர்கள் அங்கு தங்கியிருந்த காலத்தில், பன்வெல்லில் உள்ள சல்மான் கானின் பண்ணை வீட்டிற்குச் செல்லும் வழியைக் கண்டுபிடித்து, பள்ளங்களை ஆராய்ந்து, நடிகரின் கார் அந்த சாலையில் மணிக்கு 25 கிமீ வேகத்தில் மட்டுமே பயணிக்கிறது என்பதை யூகித்தனர்.
லாரன்ஸ் பிஷ்னோயின் ஆட்கள், சல்மான் கானின் பண்ணை வீட்டில் உள்ள பாதுகாவலர்களுடன் நட்பாகப் பழகி இருக்கின்றனர். இதனால், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் சல்மான் கானின் நடமாட்டத்தைப் பற்றிய தகவல்களைப் தெரிந்து கொள்வதற்காக, அவரின் ரசிகர்களைப் போல காட்டி கொண்டுள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் அவர்கள் அங்கு இருந்தபோது, சல்மான் கான் பண்ணை வீட்டிற்கு இரண்டு முறை சென்றிருக்கிறார். இருப்பினும், இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் கொல்வதற்கான வாய்ப்பை தவறவிட்டுள்ளனர்.