நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991ஆம் ஆண்டு, ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையில் இன்றளவும் பல மர்மங்கள் நீடிக்கிறது. இந்த வழக்கை பின்தொடர்ந்த பத்திரிகையாளர்கள், விசாரித்த விசாரணை அதிகாரிகள், ராஜீவ் காந்திக்கு நெருக்கமான அரசியல் தலைவர்கள் படுகொலை தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
ராஜீவ் காந்தி படுகொலையில் நீடிக்கும் மர்மங்கள்:
அதன் தொடர்ச்சியாக, ராஜீவ் காந்திக்கு நெருக்கமானவராக கருத்தப்படும் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் படுகொலை குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்களை தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய டி.என். சேஷன், கடந்த 2019ஆம் ஆண்டு காலமானார்.
இந்நிலையில், 'Through the Broken Glass' என்ற பெயரில் டி.என். சேஷன் எழுதிய சுயசரிதை புத்தகம் இந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவு தனக்கு தனிப்பட்ட இழப்பு என குறிப்பிட்டுள்ள சேஷன், ராஜீவ் காந்தி கொல்லப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து தனக்கு ஒரு செய்தி வந்ததாகவும் அதில் ராஜீவை கவனமாக இருக்க சொல்லுமாறு அவர்கள் தன்னிடம் சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.
"முன்பே எச்சரித்த காஞ்சி சங்கர மடம்"
"10 மே 1991 அன்று, விடியற்காலையில் ராஜீவை அழைத்தேன். எந்த திட்டமிடலும் இல்லை. அது எனது கவலையை வெளிப்படுத்தும் தனிப்பட்ட உரையாடலாக இருந்தது. அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த ராஜீவ், "நான் இரண்டு முறை இறக்க மாட்டேன்' என்றார். நான் அவரை மீண்டும் எச்சரித்தேன். மிகவும் சுதந்திரமாக பிரச்சாரம் செய்யும் அவரது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அவரிடம் கெஞ்சினேன். ஆனால் பயனில்லை" என சேஷன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"நான்கு நாட்களுக்குப் பிறகு, மே 14 அன்று, காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து எனக்கு ஒரு செய்தி வந்தது. ராஜீவை கவனமாக இருக்க சொல்லும்படி சொன்னார்கள். நான் எச்சரித்த போதிலும், ராஜீவ் ரிஸ்க்கை லேசாக எடுத்துக்கொள்கிறார் என்று காஞ்சி சங்கர மடத்திடம் நான் பதில் அளித்தேன்.
இது தொடர்பாக மீண்டும் அவருக்கு (ராஜீவ்) நேரடியாக ஃபேக்ஸ் அனுப்பப்பட்டது. அது, மே 17ஆம் தேதி அவரது மேஜையை அடைந்தது. ஆனால், அதைப் படிக்கும் முன்னரே, மே 21 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் அவர் கொல்லப்பட்டார். நான் மீண்டும் துக்கமடைந்தேன். நான் அவரின் தகனச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை. அன்று முழுவதும் வீட்டில் இருந்தேன்" என சேஷன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"ஜோதிடத்தில் எனக்கு இருந்த ஆர்வம் காரணமாக, ராஜீவ் பற்றி நட்சத்திரங்கள் என்ன கணிக்கின்றன என்பதைப் பார்க்க ஆர்வமாக இருந்தேன். ராஜீவ் கட்சி வெற்றி அடையும் என்ற முடிவுக்கு வர பல காரணிகளைத் தவிர, சரியான ஜோதிட காரணங்களும் இருந்தன. முரண்பாடாக, அதுவே எனக்கு பயத்தை ஏற்படுத்தியது" என சேஷன் எழுதியுள்ளார்.