ஒடிசா ரயில் விபத்தில் காணாமல்போன தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை கண்டுபிடிக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒடிசா சென்றுள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய தமிழ்நாட்டு குழு, விபத்தில் அடையாளம் காணப்படாதோரை அறியும் வரை தங்கியிருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


ஒடிசாவில் தமிழ்நாடு குழு:


தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ் .எஸ். சிவசங்கர் மற்றும் உயர் அலுவலர்கள் கொண்ட தமிழ்நாடு குழு ஒடிசா சென்று, மீட்புப்பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது.


ஒடிசா ரயில் விபத்தில் இன்னும் 12 பேர் அடையாளம் காணப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை, தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என கூறப்படுகிறது. மூன்று ரயில்கள் சிக்கிய இந்த விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.


கொல்கத்தாவில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இந்த ரயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தது. இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அடுத்த சிறிது நேரத்தில் எதிர் தண்டவாளத்தில் வந்துக் கொண்டிருந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து அதே பாதையில் வந்த சரக்கு ரயிலும் விபத்துக்குள்ளான ரயில் மீது மோதியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. 


"யாரேனும் தவறு இழைத்திருந்தால் கடும் நடவடிக்கை"


உயிரிழந்தவர்கள், பலத்த காயம் மற்றும் இலேசான காயம் அடைந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகமும், மத்திய அரசும் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. ரயில் விபத்து காரணமாக சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் செல்லும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


முன்னதாக, பாலசோரில் ரயில் விபத்து நடத்த இடத்தில் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். 


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்த பின்னர் பேட்டியளித்த பிரதமர் மோடி, இந்த சம்பவத்தில் யாரேனும் தவறு இழைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனவும் அரசின் முழு பலத்தையும் பயன்படுத்தி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.


இந்த ரயில் விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒடிசா ரயில் விபத்து எப்படி நடந்தது என்பதை அறிய உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஒடிசா வந்தடைந்த அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். விபத்திற்கான மூல காரணத்தைக் கண்டறிவது முக்கியம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்த விசாரணையை எந்தவித இடையூறும் இல்லாமல் தனியாக விசாரணை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.