Tirumala Tirupati: திருப்பதி ஏழுமலையான்  கோயிலின் நவம்பர் மாத சேவைகளுக்கான முன்பதிவு டிக்கெட்டை  தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.


திருப்பதி  கோயில்:


உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்திய மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையான தரிசிக்க வருகின்றனர். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி மலைக்கு வாகனங்கள் மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாகவும் சென்று பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


நவம்பர் மாத டிக்கெட்: 


இந்நிலையில், இந்த கோயிலில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஆர்ஜித சேவையின் தரிசனத்திற்கு டிக்கெட் முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்பட உள்ளது. டிக்கெட்டுகளை பெற்றவர்கள் பணத்தை செலுத்தி தங்களது டிக்கெட்டுகளை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாத சேவையான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றின் சேவைகளுக்கான டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பக்தர்கள் 21ஆம் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், நவம்பர் மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டோக்கன் வரும் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும்.


வரும் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு அறக்கட்டளை தரிசனம் மற்றும் தங்குமிடத்திற்கான முன்பதிவு நடைபெறும். மேலும், அன்று மாலை 3 மணிக்கு மூத்த குடிமக்களுக்கான முன்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு தொடங்க உள்ளது. https://online.tirupatibalaji.ap.gov.in/home/dashboard என்ற இணைய தளத்தில் பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பதி கோயிலில் கட்டுப்பாடுகள்:


சிறுத்தை நடமாட்டம் காரணமாக, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பக்தர்கள், காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே படிக்கட்டுகள் மூலம் திருப்பதி மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.  அதுமட்டும் இன்றி, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரு சக்கர வாகனங்களின் மலை ஏறக்கூடாது என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மேலும், வனவிலங்களை சமாளிக்கும் வகையில் மரத்தடியையோ அல்லது கட்டையையோ கொண்டு வர வேண்டும் என பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.