தனிநபர் கடன் வாங்க முற்படுபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.


தனிநபர் கடன்:


அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெறுவது என்பது இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. பொதுமக்களின் தேவைகளை உணர்ந்து தனிநபர் கடன், வீட்டு கடன், கார் கடன் என பல்வேறு பிரிவுகளில் வங்கிகள் கடன்களை வாரி வழங்கி வருகின்றன. அதற்கான வட்டி மூலம், வங்கிகள் கொள்ளை லாபம் பெற்று வருகின்றன. அதேநேரம், முறையாக மாதத்தவணை செலுத்தாவிட்டால் அதற்காக அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், தனிநபர் கடன் பெறுவதற்கு முன்பாக வாடிக்கையாளர் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


01. வட்டி விகிதம்:


தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் என்பது வீட்டுக்கடன் உள்ளிட்ட மற்ற கடன்களுக்கான வட்டி விகிதத்தை காட்டிலும் அதிகம். காரணம் எந்தவொரு கூடுதல் பாதுகாப்பும் இன்றி வங்கிகள் இந்த தனிநபர் கடனை வழங்குகின்றன. எனவே வங்கிகளில் அதிகபட்சமாக 11 முதல் 16 சதவிகிதம் வரையில் கூட வட்டி வசூலிக்கப்படும். வங்கிகள் அல்லாத பிற நிதி நிறுவனங்களில் இதை விட கூடுதலாகவும் வட்டி வசூலிக்கப்படலாம். இதன் காரணமாக வட்டி விகிதம் தொடர்பான ஆவணங்களை கவனமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதேநேரம், நீங்கள் மாத சம்பளம் வாங்குபவராக இருந்து, உங்களது நிறுவனம் டாப் லிஸ்டில் பட்டியலிடப்பட்டு இருந்தால், குறைந்த வட்டியில் கடன் பெற முடியும்.


02. கால அவகாசம்:


தனிநபர் கடன் பெறும் ஒருவர் அந்த கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை தேர்வு செய்வதிலும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட காலத்தை தேர்வு செய்வதன் மூலம் தவணைத்தொகையை குறைத்து, எளிதாக திருப்பி செலுத்துவதற்கான வசதியும் ஏற்படுத்தும். ஆனால் குறுகிய காலத்தை தேர்வு செய்தால் நீங்கள் அதிக தவணைத்தொகையை கட்ட வேண்டும். நீண்ட கால அவகாசத்துடன் கூடிய தனிநபர் கடன் சிறந்ததாக இருக்கும் என்பதே நிதி ஆலோசகர்களின் பரிந்துரையாக உள்ளது. 


03. அபராத விவரம்:


மாத தவணையை முறையாக செலுத்தி வந்தால் எந்த பிரச்னையும் இல்லை. ஒருவேளை தாமதமானால் வங்கிகள் அதற்கு அபராதம் விதிக்கும். அதன்படி, வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், தவணை தொகையில் 5 முதல் 10 சதவிகிதம் வரை அபராதமாக வசூலிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, தவணை செலுத்த தாமதமானால் விதிக்கப்படும் அபராதம் எவ்வளவு என்பதையும் ஆவணங்களில் ஆராய வேண்டும்.


04. பிரீ பேமண்ட் சார்ஜ்:


தனிநபர் கடன் பெறுபவர்களில் பெரும்பாலானோர் உடனடி அவசர தேவைக்காகவே அந்த வாய்ப்பை பயன்படுத்துகின்றனர். எனவே, நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையிலான தவணை மூலம் தான் கடனை அடைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக கையில் பணம் இருந்தால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே, பிரீ பேமண்ட் மற்றும் ப்ரீ-க்ளோசர் முறையில் கடனை அடைக்கும் வாய்ப்பு வாடிக்கையாளருக்கு வழங்கப்படுகிறது. அவ்வாறு செய்யும்போது அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அந்த தொகை எவ்வளவு என்பதையும் பயனாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.


05. கிரெடிட் ஸ்கோர்:


எந்த வகையான கடனை பெறுவதற்கும் கிரெடிட் ஸ்கோர் மிகவும் முக்கியமானது. உங்கள் கடன் விண்ணப்பத்தை அனுமதிப்பது முதல் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குவது வரையிலான அனைத்திற்கும் கிரெடிட் ஸ்கோர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வாடிக்கையாளரின் விண்ணப்பம் புராசசிங்கில் இருக்கும் போது, ​கிரெடிட் ஏஜென்சிகள் கிரெடிட் ஸ்கோரை ஆய்வு செய்வது பாதகமாக அமையலாம். இதன் காரணமாக ஒரே நேரத்தில் பல வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.