Tirumala Tirupati: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 36 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி கோயில்
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகம், ஆந்திரா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பாதயாத்திரை, இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதிகரிக்கும் கூட்டம்
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணமே உள்ளது. வார இறுதி நாட்களை போலவே வார நாட்களிலும் 4 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். நேரடி இலவச தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேரடி இலவச தரிசனத்தில் 36 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால், வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மோர் உள்ளிட்டவைகளை தன்னார்வலர்கள் கொண்டு வழங்கி வருகிறது.
காரணம்
தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், கோடை கால விடுமுறையை கழிக்க பெரும்பாலனவர்கள் சுற்றுலா செல்கின்றனர். அதில் மிக முக்கியமான கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. அதுவும் கோடை விடுமுறை முடிவடைய உள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இதனிடையே திருப்பதியில் நேற்று 74,583 பேர் தரிசனம் செய்ததாக திருப்பதி தேவஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும், 3.57 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 40,343 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Crime: ஆன்லைனில் ரூ. 23 இலட்சத்தை இழந்த இளைஞர்; குற்றவாளிகளின் ரூ.2 கோடியை முடக்கிய காவல் துறை!