Tirumala Tirupati: திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் இலவச தரிசன டிக்கெட்டுகள் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி கோயில்:
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையான தரிசிக்க வருகின்றனர். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி மலைக்கு வாகனங்கள் மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாகவும் சென்று பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
குவியும் பக்தர்கள்:
இந்நிலையில், கடந்த மூன்று தினங்களாகவே திருப்பதி கோயில் பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தபடியே காட்சி அளிக்கிறது. அதுவும், பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை விடப்பட்டு உள்ளதால், திருப்பதி ஏழுமலையான கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி, புரட்டாசி மாதம் 2வது சனிக்கிழமை என்பதாலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 அறைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
மேலும், நேற்று இரவு 7 மணியில் இருந்து 9 மணி வேரை பௌர்ணமி கருடசேவை நடந்ததால் கூட்டம் அலைமோதியது. எப்படியென்றால், இலவச தரிசனம் செய்ய சுமார் 7 கிலோ மீட்டருக்கு நீண்ட வரிசையில் 45 மணி நேரமாக காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இன்னும் இரண்டு நாட்களுக்கு பக்தர்கள் கூட்டம் குறையாது என்று தேவஸ்தானம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலவச தரிசன டிக்கெட் ரத்து:
இதற்கிடையில், திருமலைக்கு செல்லும் பக்தர்களால் அலிபிரி சோதனை சாவடியில் நேற்று காலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், திருப்பதியில் தங்கும் விடுதிகளில் நிரம்பி உள்ளனர். இதனால் பக்தர்கள் தங்குவதற்கு அறை கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். திருப்பதியில் நேற்று 66, 233 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
மேலும், உண்டியல் காணிக்கையாக ரூபாய் 4.71 கோடி வசூலாகி உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கூட்டம் அதிக அளவில் இருப்பதால் இலவச தரிசன டிக்கெட்டுகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. அக்டோபர் 1,7,8,14 மற்றும் 15ஆம் தேதிகளில் திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட்டுகள் முற்றிலுமாக தேவஸ்தானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Vaigai Train: வந்தே பாரத் ரயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்.. பயணிகள் அதிருப்தி!