கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்ட முக்கியமான மன்னர்களில் ஒருவர் திப்பு சுல்தான். கர்நாடகா மாநில எல்லைக்குள் வரும் மைசூரு பகுதியில் 1700களில் ஆட்சி செய்த திப்புசுல்தான், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பல நல்ல திட்டங்களை முன்னெடுத்தார் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.


சீர்திருத்தங்களை கொண்டு வந்த திப்பு:


கடந்த 1750ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் பிறந்த திப்பு சுல்தான், மைசூர் பட்டுத் தொழில் வளர்ச்சிக்கு காரணமான புதிய நில வருவாய் அமைப்பு உள்பட பல நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். 


காலனித்துவ எதிர்ப்பின் வீரனாகக் கொண்டாடப்படும் திப்பு சுல்தான், கடந்த 1799ஆம் ஆண்டு, நவம்பர் 20ஆம் தேதி நான்காவது ஆங்கிலோ-மைசூர் போரில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் படைகளால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். 


இதற்கிடையே, திப்பு சுல்தான் ஒரு பெரிய கொடுங்கோலன் என்றும் அவரது ஆட்சி காலத்தில் ஆயிரக்கணக்கானோர் கட்டாயப்படுத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் வலதுசாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். கர்நாடகாவில் கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து திப்பு சுல்தான் பிறந்த நாளை அரசு விழாவாக காங்கிரஸ் அரசு கொண்டாடியது.


திப்பு சுல்தான் எதிர்ப்பு அரசியல்:


ஆனால், பாஜக அரசு அங்கு ஆட்சி அமைத்ததை அடுத்து அது ரத்து செய்யப்பட்டது. திப்பு சுல்தான் எதிர்ப்பு அரசியலை தொடர்ந்து செய்து வருகிறது பாஜக. 


இந்நிலையில், சர்ச்சை பேச்சுக்கு பெயர் போன கர்நாடக பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல், அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளார். திப்பு சுல்தானின் தீவிர ஆதரவாளர்கள் அனைவரையும் கொல்ல மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். திப்பு சுல்தானின் வழித்தோன்றல்களை விரட்டியடித்து காடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.


இதையும் படிக்க: Crime Murder Fridge Stored Body : ஃப்ரிட்ஜில் காதலி உடல்.. வேறொரு பெண்ணுடன் திருமணம்.. டெல்லி கொலை வழக்கில் பகீர் பின்னணி..!


ஹனுமான் vs திப்பு சுல்தான்:


கொப்பல் மாவட்டத்தின் யெலபுர்கா பகுதியில் இன்று பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பாஜக மாநில தலைவர் கட்டீல், "நாங்கள் ராமர், ஹனுமான் பக்தர்கள். நாங்கள் ஹனுமானுக்கு பிரார்த்தனை செலுத்துகிறோம். நாங்கள் திப்புவின் சந்ததியினர் அல்ல. திப்புவின் சந்ததிகளை வீட்டுக்கு அனுப்புவோம்.


இங்குள்ள மக்களிடம் நான் கேட்கிறேன். நீங்கள் ஹனுமானை வழிபடுகிறார்களா அல்லது திப்புவை வழிபடுகிறார்களா? திப்புவின் தீவிர சீடர்களை காட்டுக்கு அனுப்புவீர்களா? யோசித்துப் பாருங்கள்.


இந்த மாநிலத்திற்கு ஹனுமான் பக்தர்கள் தேவையா திப்புவின் வழித்தோன்றல்கள் தேவையா? நான் ஒரு சவால் விடுக்கிறேன். திப்புவின் தீவிர சீடர்கள் இந்த வளமான மண்ணில் உயிருடன் இருக்கக் கூடாது" என்றார்.