காடுகள் அழிக்கப்படுவதால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகிறது. குறிப்பாக, வனம் சாராத செயல்களுக்காக வனப்பகுதியை பயன்படுத்தப்படுவது அங்கு வாழும் உயிரினங்களுக்கு பெரும் சிக்கலை தருகிறது. 


அதிகரிக்கும் மனித - வனவிலங்கு மோதல் சம்பவங்கள்:


வனப்பகுதி, விவசாய நிலமாக மாற்றப்படுவதாலும் அங்கு சாலைகள் கட்டப்படுவதாலும் அங்கு போதுமான உணவு, தண்ணீர் கிடைக்காமல், வனவிலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு செல்வது தொடர் கதையாகி வருகிறது. இதனால், மனித - வனவிலங்கு மோதல் அதிகரித்து வருகிறது.


அதன் தொடர்ச்சியாக, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் புலி நுழைந்து, மக்களை அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிபிட் மாவட்டத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் இருந்து காளிநகரில் உள்ள அட்கோனா கிராமத்திற்குள் நேற்று இரவு புலி நுழைந்தது. 


நாய்கள் விடாது குரைத்ததை தொடர்ந்து, ஊருக்குள் புலி நுழைந்தது மக்களுக்கு தெரிய வந்தது. இதனால், புலியை பார்ப்பதற்காக கிராம மக்கள் கூடினர். இதனால், அச்சத்தில் மதில் ஒன்றன் மீது ஏறிய புலி, எங்கும் நகராமல் படுத்துவிட்டது. இதன் காரணமாக, கிராம மக்கள் இரவு முழுவதும் தூங்கவில்லை.


சுவரில் ஒய்யாரமாக படுத்துறங்கிய புலி:


மதில் மீது உறங்கும் புலியைப் படம்பிடிக்க கூரைகள் மற்றும் வேலிகளுக்குப் பின்னால் மக்கள் கூட்டம் கூடியது. புலி உறங்குவதை வீடியோ எடுக்க கிராம மக்கள் முற்படும் வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வைரலானது. புலி இருக்கும் பகுதிக்கு உள்ளே செல்வதை தடுக்கும் நோக்கில் நாலா புறமும் தடுப்பு அமைக்கப்பட்டது. இதனால், அங்கு யாராலும் செல்ல முடியவில்லை.


இறுதியில், புலிக்கு மயக்க ஊசி செலுத்திய வனத்துறை அதிகாரிகள், அதை மீட்டுள்ளனர். ஊருக்குள் நுழைந்த புலி, மனிதர்களை தாக்கியதாக எந்த தகவலும் இல்லை. ஆனால், அச்சமடைந்த கிராம மக்கள், வனத்துறையினரின் அலட்சியத்தால் தான், கிராமத்துக்குள் புலி புகுந்து விடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.






பிலிபிட் மாவட்டம், புலிகள் காப்பகத்தின் தாயகமாகும். இந்த மாவட்டத்தில் புலிகள் தாக்கியதால் கடந்த நான்கு மாதங்களில் ஐந்து பேர் இறந்துள்ளனர். கடந்த 2015இல் புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதில் இருந்து குறைந்தது 40க்கும் மேற்பட்ட புலி தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.