துபாயில் இருந்து தென்னமெரிக்கா நாடான நிகரகுவா நோக்கி சென்ற விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த டிசம்பர் 21ஆம் தேதி, பிரான்ஸ் நாட்டின் வாட்ரி நகர விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து 160 கிமீ தொலைவில் அமைந்துள்ளது வாட்ரி நகரம்.


கடத்தப்பட்டார்களா தமிழர்கள்?


தரையிறங்கிய அந்த விமானத்தில் 303 பயணிகள் பயணம் செய்தனர். அதில், பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள். அவர்களில் சிலர் இந்தியும் தமிழும் பேசியதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு மத்தியில், பிரான்ஸ் அரசுக்கு ரகசிய தகவல் ஒன்றும் கிடைத்தது. விமானத்தில் பயணம் செய்தவர்கள், கடத்தப்பட்டிருக்கலாம் என அரசுக்கு தகவல் கிடைத்தது.


அதுமட்டும் இன்றி, விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் குடியேற்ற ஆவணங்கள் இல்லை என்றும் தகவல் வெளியானது. எனவே,
வாட்ரி நகர விமான நிலையத்தில் இருந்து செல்ல அந்த விமானத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடமும் விமான நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.


அப்போது, விமானத்தில் பயணம் செய்த பெரும்பாலான பயணிகள், நிகரகுவா நாட்டுக்கு செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். நிகரகுவா நாட்டை பொறுத்தவரையில், தாராள குடியேற்ற கொள்கை விதிகளை பின்பற்றி வருகிறது. எனவே, அங்கு குடியேறுவது மிகவும் எளிது. எனவே, விமானத்தில் பயணம் செய்த பயணிகள், நிகரகுவா நாட்டுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து வட அமெரிக்க நாடுகளில் சட்ட விரோதமாக குடியேற திட்டமிட்டிருந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை செய்யப்பட்டது.


இந்தியர்களை மீட்க களத்தில் இறங்கிய இந்திய தூதரகம்:


இப்படிப்பட்ட சூழலில், சிக்கிய இந்தியர்களை மீட்க இந்திய தூதரகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்திய தூதர்களின் தலையீட்டால், நான்கு நாட்களாக விமான நிலையத்தில் சிக்கியிருந்த விமானம் இந்தியாவுக்கு திரும்பி செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், விமானத்தில் பயணம் செய்த பெரும்பாலான பயணிகள் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பி செல்ல விரும்பாததால், விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.


இருப்பினும், பயணிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட 4 நாள்களாக பிரான்ஸில் இருந்த விமானம், இன்று காலை மும்பை வந்தடைந்தது. 


நிகரகுவா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக உயர்ந்து வருகிறது. அதே சமயத்தில், இந்தியாவில் நிகரகுவா நாட்டுக்கு தூதரகம் இல்லை. ஆனால், கெளரவ தூதர் மட்டும் உள்ளார். இந்திய நாட்டுடனான உறவை, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள தூதரகத்தின் மூலம் நிர்வகித்து வருகிறது நிகரகுவா.