பள்ளி ஒன்றில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் திருச்சூர் நகருக்கு அருகில் உள்ள நாய்க்கானலில் உள்ள உதவி பெறும் பள்ளியான விவேகோதயம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு:
துப்பாக்கிச் சூடு நடத்தியவர், முன்னாள் மாணவர் மற்றும் முலாயத்தைச் சேர்ந்த ஜெகன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பள்ளியின் ஊழியர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளால் பலமாக தாக்கப்பட்டு பின்னர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் காலை 10.15 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடந்துள்ளது. போதைக்கு அடிமையானவர் என்று கருதப்பட்ட ஜெகன், முதலில் பள்ளியின் அலுவலக அறைக்குள் நுழைந்து, ஒரு நாற்காலியை இழுத்து, பின்னர் பேண்ட்டில் பாக்கெட்டில் வைத்திருந்த ஏர் கன்னை எடுத்தார். பின்னர் அங்கிருந்த ஊழியர்களிடம் துப்பாக்கியை காட்டினார்.
குழப்பத்தின் மத்தியில், ஜெகன் ஒரு வகுப்பறைக்குள் நுழைந்து மூன்று முறை துப்பாக்கியை மேலே நோக்கி சுட்டுள்ளார். பள்ளி நிர்வாகத்தினர் அவரை தடுக்க முயன்றனர், ஆனால் அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இருப்பினும், பள்ளி வளாகத்திற்கு வெளியே இருந்த உள்ளூர்வாசிகளின் உதவியினால் பள்ளி நிர்வாகம் அவரை அடக்கி, சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளது. ஜெகன் கடந்த செப்டம்பர் 28ம் தேதி, திருச்சூர் கன் பஜாரில், 1,800 ரூபாய்க்கு இந்த துப்பாக்கியை வாங்கியதாக கூறப்படுகின்றது.
துப்பாக்கிச்சூடு:
நாய்க்கனலில் உள்ள உதவி பெறும் நிறுவனமான விவேகோதயம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஊழியர்கள் கூறுகையில், முன்னாள் மாணவரான ஜெகன் இன்று அதாவது நவம்பர் 21ஆம் தேதி காலை 10.15 மணியளவில் ஏர் கன் உடன் பள்ளிக்கு வந்தார். அவர் நேரடியாக பணியாளர் அறைக்கு வந்து ஆசிரியர்களை மிரட்டி வகுப்பறைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜெகன் பள்ளியை விட்டு வெளியேறினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்ட தனது தொப்பியை ஆசிரியர்கள் திருப்பித் தருமாறு கோரி அவர் பள்ளி வளாகத்திற்கு வந்துள்ளார். தொப்பியைத் தரவில்லை என்றால் பள்ளியை எரித்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
போலீஸ் விசாரணை:
ஜெகன் தனது எஸ்எஸ்எல்சி தேர்வினை எழுத மார்ச் மாதம்தான் வரவேண்டும் என பள்ளி சார்பில் ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது ஜெகன் தனது ஆசிரியர்களைத் தாக்கியதற்காக தனது முந்தைய பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் விவேகோதயத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜெகனை தற்போது திருச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சூர் நகர குற்றப்பிரிவு ஏசிபி உள்ளிட்டோர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.