கேரளாவில் திருச்சூர் பூரம் கொண்டாட்டங்களை நிறுத்துவது கடினம் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா கூறியுள்ளார். நாட்டில் கொரோனா தொற்றின் அளவு மீண்டும் அதிகரித்துவருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை முன்பைவிட அதிதீவிரமாக பரவிவருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு தடைவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




இது ஒருபுறமிருக்க, கேரளாவில் ஆண்டுதோறும் நடக்கும் 'திருச்சூர் பூரம் திருவிழா' இவ்வாண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்த திருவிழாவிற்காக முன்கூட்டியே பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும், அதனால் இந்த திருவிழாவை முழுமையாக நிறுத்தினால் பல பிரச்சனைகள் வரும் என்றும் கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறியுள்ளார். இந்த திருவிழாவை நடத்த உரிய பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்ற கோவில் தேவஸ்வம் கமிட்டி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் கொரோனா பாதிப்பு இல்லாதவர்களாக இருந்தாலும் கட்டாயமாக முகக்கவசம் அணிதல், சானிட்டைசர் பயன்படுத்துதல் உள்ளிட்ட விதிகளை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் மட்டுமே திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 




 
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சைலஜா கடந்த சனிக்கிழமையன்று கேரளா அரசு, மத்திய அரசிடம் 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கேட்டதாகவும். இதுவரை மத்திய அரசிடமிருந்து 60 லட்சத்து 84 ஆயிரத்து 360 டோஸ்களை கேரளா அரசு பெற்றுள்ளது என்றும் கூறினார். அதேபோல மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டதில் 56 லட்சத்து 75 ஆயிரத்து 138 டோஸ்கள் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.


மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை சந்தித்த பிறகு பேட்டியளித்த கேரளா அமைச்சர் சைலஜா, நாட்டின் பிற பகுதிகளை போலவே கேரளாவிலும் கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் மோசமாக பரவிவருவதாகவும். பரவலை கட்டுப்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினார். இரண்டு நாட்களில் அதிகபட்சமாக 2.5 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும், அதிலும் குறிப்பாக 45 வயதிற்கு கீழே இருப்பவர்களுக்கும் அவர்களில் தடுப்பூசி இன்னும் எடுத்துக்கொள்ளாதவர்களுக்கும் சோதனை நடத்தி வருவதாகவும் கூறினார்.


இதுவரை கேரளாவில் 1 கோடியே 39 லட்சம் பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டுள்ளது, இறப்பு விகிதம் 0.4 % என்ற குறைந்த அளவிலேயே உள்ளது என்று கூறினார். நாட்டின் பிற பகுதிகளில் நோயாளிகளுக்கு போதுமான மருத்துவமனை அல்லது ஆக்ஸிஜன் சப்ளை இல்லை என்று கூறிவரும் நிலையில், கேரளா விடாமுயற்சியுடன் நல்ல திட்டமிடுதலோடு செயல்படுவதாக அவர் கூறினார். 




கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, மிகக்குறைந்த அறிகுறி உள்ள மக்கள் வீட்டில் தனியறையில் தனிப்படுத்திக்கொள்ள வேண்டும், அவர்களுக்கு தனியாக தங்கும் அறை மற்றும் கழிப்பறை கொடுக்கவேண்டும். அப்படி தனியறை கொடுக்க வசதி இல்லாதவர்களுக்கு அரசு பராமரிப்பு மையங்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். மேலும் லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்கள் அரசின் மாவட்ட வாரியாக உள்ள மருத்துவ முகாம்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். அதேபோல கொரோனாவின் அளவு தீவிரமாக உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். ஆனால் கேரளாவில், கொரோனாவின் இரண்டாம் அலையிலும் கூட தீவிர சிகிச்சை தேவைப்படும் மக்களின் அளவு குறைவாகவே இருந்துவருகிறது என்று அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.