பஞ்சாப்பில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் மூன்று பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன, இதனால் அமிர்தசரஸில் கடத்தல் முயற்சியை முறியடித்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படை அதன் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
”மே 19 அன்று இரவு சுமார் 8:55 மணியளவில், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள உதார் தரிவால் கிராமத்திற்கு அருகில் உள்ள பகுதியில், சந்தேகத்திற்கிடமான ஆளில்லா விமானத்தின் சலசலப்பு சத்தம் கேட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் ஆளில்லா விமானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி தரையில் வீழ்த்தினர்," என எல்லை பாதுகாப்பு படை அதன் அறிக்கையில் தெரிவித்தது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானம்:
அப்பகுதியில் முதற்கட்ட தேடுதலின் போது, விவசாய பகுதியில் இருந்து பகுதி உடைந்த நிலையில் இருந்த கருப்பு நிற ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்பு படையினர் மீட்டனர் என்றும், அமிர்தசரஸ் செக்டார் பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி, கடத்தல் முயற்சியை முறியடித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத்தில் 2 போதை பொருள் பாக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தது. மீட்கப்பட்ட ஹெராயின் போதைப்பொருளின் மொத்த எடை தோராயமாக -2.6 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் இரண்டு ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், மூன்றாவது ஆளில்லா விமானமும் எல்லை படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஆனால் மூன்றாவது ஆளில்லா விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததால் அதனை மீட்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.