காசநோய் மருந்தான பெடாகுலின் மீதான ஜே & ஜே குளோபல் நிறுவனத்தின் காப்புரிமை கடந்த மாதத்துடன் காலாவதியானது. அதைத் தொடர்ந்து மல்டி-டிரக் ரெசிஸ்டண்ட் எனப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகளுக்கும் குணமாகாத காசநோய்க்கு சிகிச்சை அளிப்பது, முன்னெப்போதையும் விட எளிமையானதாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


காசநோய்க்கான மிகச் சிறந்த மருந்துகளில் ஒன்றாகக் கருதப்படும் பெடாகுலின் மீதான ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் காப்புரிமை கடந்த மாதம் காலாவதியானது. இதன் காரணமாக, காசநோயாளிகளின் உயிர் காக்கும் மருந்தான பெடாகுலின் இனி உலகம் முழுவதும் மலிவு விலையில் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திடம் மட்டும் இருந்த இந்த மருந்தின் மீதான காப்புரிமை, கடந்த 18-ஆம் தேதியுடன் காலாவதியானது.


இதன் மூலம், உலக சுகாதார அமைப்பின்படி, காசநோயாளிகளை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியாவில், பெடாகுலின் மருந்து இனி மலிவு விலையில் கிடைக்கப்பெறும். இதற்கான பணிகளை 3 உள்நாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இது ஒரு வரப்பிரசாதம்;


இதுதொடர்பாக  ஏபிபி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசியுள்ள தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஈஸ்வர் கிலாடா “உலகின் மருந்தகம் என்று அழைக்கப்படும் இந்தியா, உலகளாவிய காசநோய் எதிர்ப்பு மருந்துகளில் 92 சதவீதத்தை வழங்குகிறது. இந்த நிலையில் பெடாகுலின் மீதான காப்புரிமை காலாவதியாகி இருப்பது இந்தியாவுக்கு மட்டுமின்றி, வளரும் நாடுகளுக்கும் வரப்பிரசாதமாக இருக்கும்.


இதனால், மல்டிடிரக் ரெசிஸ்டண்ட் காசநோய் சிகிச்சை முன்பை விட இப்போது எளிதாகிவிடும். கடந்த 50 ஆண்டுகளில் சர்வதேச அளவில் காசநோய் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்ட, ஒரே மருந்தான பெடாகுலின் மருந்தின் விலை, தற்போதைய விலையில் இருந்து ஒரு சதவிகிதம் அளவிற்கு குறையும்.


ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் காப்புரிமை முடிவுற்றதை தொடர்ந்து, பெடாகுலின் எந்த மருந்து தயாரிப்பு நிறுவனமும் அதை உருவாக்க முடியும். உற்பத்தி அதிகரிப்பதால் அதன் விலை வெகுவாகக் குறையும். உதாரணமாக குறிப்பிட்ட நிறுவனம் மட்டும் காப்புரிமை பெற்று இருந்தபோது HCV  மருந்து, ஒரு மாத்திரை ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என விற்பனையானது.


இதனால்,  84 நாட்களுக்கான தொடர் சிகிச்சைக்கு 84 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலவானது . ஆனால், அந்த மருந்து பொதுவுடைமை ஆன பிறகு 84 நாட்களுக்கும் சேர்த்து தற்போது வெறும்  250 அமெரிக்க டாலர்கள் மட்டுமே  செலவாகிறது. இது குறிப்பிட்ட நிறுவனம் காப்புரிமை பெற்று இருந்த போது ஆன செலவில் வெறும் 0.3% மட்டுமே" என சர்வதேச எய்ட்ஸ் சொசைட்டியின் ஆளும் குழு உறுப்பினராகவும் இருக்கும் டாக்டர் கிலாடா தெரிவித்துள்ளார்.


காசநோய்க்கு சிகிச்சையளிப்பதில் அதிக வெற்றி விகிதத்தைக் கொண்ட பெடாகுலின், முதன்முதலில் இந்திய சந்தையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தால் 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது ஒரு குப்பியின் விலை ரூ. 7 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.  இந்த மருந்தை 6 மாத கால சிகிச்சைக்கு பயன்படுத்த 22 ஆயிரம் ரூபாய் வரையில் செலவாகிறது. இந்தியாவில் மத்திய அரசால் மட்டுமே இந்த மருந்து கொள்முதல் செய்யப்பட்டு, பின்பு மாநில அளவிலான காசநோய் சிகிச்சை மையங்களில் பயன்படுத்தப்படுகிறது.


இந்தியாவில் பெடாகுலின் மருந்தை தயாரிக்கும் காப்புரிமையை ஜூலை 2023-க்குப் பிறகும் நீட்டிக்க வேண்டும் என, ஜே&ஜே நிறுவனம் தாக்கல் செய்த விண்ணப்பத்தை கடந்த ஏப்ரல் மாதம் இந்திய அரசு  நிராகரித்தது. இதையடுத்து,  Lupin, BDR Pharmaceuticals மற்றும் Macleods Pharmaceuticals ஆகியவை பெடாகுலின் மருந்தை இந்திய சந்தையில் விரைவில் வெளியிட உள்ளன என்று நிபுணர்கள் ஏபிபி செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேகமாக தெரிவித்துள்ளனர். 


மருந்து நிறுவனங்கள் நம்பிக்கை:


இதை உறுதிப்படுத்தும் வகையில், BDR பார்மாசூட்டிகல்ஸ் தலைவர் மற்றும் எம்.டி., தர்மேஷ் ஷா, பெடாகுலின் விலை மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாகவும், மலிவு விலையிலும் இருக்கும் என்றும், காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் பங்குதாரராக இருக்க அரசுடன் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பெடாகுலின் மீதான ஜே&ஜேவின் தனிப்பட்ட காப்புரிமை முடிவடைந்ததன் மூலம், 2025 ஆம் ஆண்டளவில் காசநோயை அகற்றுவதற்கான அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு பொது மருந்து நிறுவனங்கள் பங்களிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


Macleods Pharmaceuticals தங்களது தரப்பு நடவடிக்கையை உறுதி செய்துள்ள நிலையில்,  லூபின் செய்தித் தொடர்பாளர் மருந்தை உருவாக்குவதற்கான திட்டங்கள் நடந்து வருவதாகக் கூறினார்,  சுகாதார அமைச்சகத்தின் மத்திய காசநோய் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், பல்வகை மருந்து-எதிர்ப்பு காசநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு பெடாகுலின் ஒரு அத்தியாவசிய மருந்து என்றும், அதன் மலிவு விலையில் அனைத்து பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் கூறினார்.


கவலை தரும் விஷயம்


டெல்லி காசநோய் மையத்தின் இயக்குநர் டாக்டர் கே.கே. சோப்ரா, பெடாகுலினைத் சரியான கண்காணிப்பின்றி தடையின்றி உட்கொள்வது, மருந்துக்கு எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும் பாக்டீரியாக்களுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தார். அதனால் தான் அந்த மருந்து இதுவரையிலும் மையத்தின் நிபந்தனை அணுகல் திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது, எனவும் விளக்கமளித்துள்ளார். ”இந்த மருந்தை தனியாரிடம் கொடுத்தாலும், நோயாளிகள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதை கண்காணிக்க வழியில்லை. ஏனென்றால், மருந்து உட்கொள்வதை கண்காணிக்கும் முறை தனியாரிடம் இல்லை. அரசு திட்டத்தின் கீழ், மருந்து கொடுத்து வருகிறோம். கண்காணிப்பில் உள்ள நோயாளிகளுக்கு, மருந்து தவறாகப் பயன்படுத்தப்படவில்லை" என்றும் தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் காசநோய் பாதிப்பு:


இந்தியா 2012-ஆம் ஆண்டு காசநோயை ஒரு "அறிவிக்கக்கூடிய" நோயாக மாற்றியது. அதன்படி, மாநிலங்கள் அரசு அதிகாரிகளிடம், காசநோய் தொடர்பான தகவல்களை தெரிவிப்பது கட்டாயமாகும். உலகளாவிய காசநோய் அறிக்கை 2022-இன் படி, உலகில் உள்ள மொத்த காசநோய் பாதிப்புகளில்  28 சதவிகிதம் இந்தியாவில் உள்ளது. 2021 ஆம் ஆண்டில், காசநோயால் சுமார் 5.06 லட்சம் பேர் இறந்துள்ளனர். காசநோய் தொடர்பான நடப்பாண்டு அறிக்கையின்படி, கடந்த ஆண்டில்  இந்தியாவில் 24.2 லட்சம் காசநோய் பாதிப்புகள் அல்லது ஒரு லட்சம் பேரில் 172 பேருக்கு காசநோய்  இருப்பது தெரிய வந்துள்ளது.


- அபிஷேக் டே (மொழிபெயர்த்தவர் : குலசேகரன் முனிரத்தினம்)