சிஐஎஸ் எஃப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் டெல்லி பிரிவைச் சேர்ந்த மூன்று மோப்ப நாய்கள் ஒரே நாளில் ஓய்வு பெற்றன. அவற்றிற்கு மிக விமரிசையாக பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
டெல்லி மெட்ரோவின் முக்கியமான ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையஙகளில் ரோமியோ, ராக்கி, சோனொ ஆகிய நாய்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தன. இவை பயணிகள் கொண்டுவரும் பொருட்கள் மற்றும் அவர்களிம் பைகளை மோப்பம் பிடித்து அவற்றில் சந்தேகத்துக்குரிய வகையில் வெடிப்பொருள் இருந்தால் கண்டறிந்து துப்பு கொடுக்கும். சிஐஎஸ்எஃப் பாதுகாப்புப் பிரிவின் சொத்தாக இருந்து வந்த இந்த மூன்று நாய்களும் ஓய்வு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இம்மூன்று நாய்களைக் கையாளுபவர்கள் முதுகில் ஒரு பதக்கத்தை சுற்றி, அவர்களுக்கு கேக் கொடுத்து, மலர் தூவி மரியாதை செய்து முறைப்படி விடைபெறச்செய்தனர்.
3 நாய்கள் - இவற்றில் சோனி, ஒரு பெண் ஜெர்மன் ஷெப்பர்ட்; ராக்கி, ஒரு ஆண் கோல்டன் ரெட்ரீவர்; மற்றும் ரோமியோ, ஒரு ஆண் காக்கர் ஸ்பானியல் வகையைச் சேர்ந்தவையாகும்.
சோனி ஃபிப்ரவரி 2015 முதல் மார்ச் 2023 வரை பணியாற்றியுள்ளது. “சோனி சந்தேகத்திற்குரிய விசயங்களை கண்டறிவது மட்டுமல்லாமல் மெட்ரோ நிலையங்களை பத்திரமாக பாதுகாக்கவும் மிகவும் உதவியது” என்கிறார் ஓர் அதிகாரி. மண்ணீரலில் உள்ள ட்யூமர் பிரச்சனையால் அன்று நடந்த பிரிவு உபச்சார விழாவில் அதனால் கலந்து கொள்ள இயலவில்லை.
ரோமியோ அக்டோபர் 2013ல் இருந்து 2023 மார்ச் வரை பணியாற்றியுள்ளது. ராக்கி ஏப்ரல் 2014ல் இருந்து மார்ச் 2023 வரை பணியாற்றியுள்ளது. ரோமியோவும் ராக்கியும் வயது மூப்பினால் ஏற்படும் பிரச்சனைகளாலும் பாதிக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அவை விழாவில் கலந்து கொண்டன.
இந்நிலையில் ரோமியோ, ராக்கியின் ஓய்வு மிகுந்த கவலையளிப்பதாக இருப்பதாக அதன் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் தங்களின் யூனிட்டில் உள்ள அனைத்து நாய்களுமே இரண்டு பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்றதாகவும் இந்த 8 ஆண்டுகளில் இந்த இரண்டு பயிற்சியாளர்களிடமும் அவை நெருக்கமாகிவிட்டதாகவும் அந்த உயரதிகாரி தெரிவித்தார்.
மோப்ப நாய்கள் பைகளை கண்காணிக்க பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் வெடிப் பொருட்கள் இருக்கிறதா என்பதை இவை துல்லியமாக கண்டறியும். ஒரு நாளைக்கு 700 முதல் 800 பைகளை இந்த நாய்கள் மோப்பம் பிடித்து பரிசோதனை செய்துவிடும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
சிஎஸ்ஐஎஃப் டிஐஜி ஜிதேந்திர ரானா கூறுகையில், "டெல்லி மெட்ரோ பிரிவின் வெடிகுண்டு கண்டறியும் மூன்று CISF நாய்கள் புதன்கிழமை ஓய்வு பெற்றன. இவை 8 ஆண்டுகள் பணி புரிந்துவிட்டன. அவற்றின் பிரிவு வருத்தமளிக்கக் கூடியதே. ஆனால் அவை ஓய்வு பெறும் காலம் வந்துவிட்டது. இனி அவை பத்திரமாக பாதுகாக்கப்படும்" என்றார்.
ஓய்வுக்குப் பின்னர் இந்த நாய்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டன. அவை ஃப்ரெண்டிகோஸ் என்ற தனனார்வ தொண்டு நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அவை அங்கே வைத்து பாதுகாக்கப்படும். அவற்றை யாரேனும் தத்தெடுக்க விரும்பினால் தத்து கொடுக்கப்படும். பெரும்பாலும் இதுபோன்ற நாய்களை அதன் ஹேண்ட்ளர்களே தத்து எடுத்துக் கொள்வது வழக்கமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.