புதிய குற்றவியல் வழக்குகள் நடைமுறைக்கு வந்தால், எந்தவொரு வழக்கும் இரண்டு வருடங்களுக்கு மேல் நீடிக்காது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கவுன்சில் கூட்டம்:
மகாராஷ்டிரா, குஜராத், கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களான டையு-டாமன் மற்றும் தாத்ரா-நகர் ஹவேலி ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம், நேற்று குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் நடந்தது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, கோவா முதலமைச்சர் பிரமோத் சவந்த் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகி பிரபுல் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர். மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், அமைச்சர்கள் மற்றும் குறிப்பிட்ட மாநில தலைமை செயலாளர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது:
நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா “இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக, பாரதீய நீதி மசோதா, பாரதீய குடிமக்கள் பாதுகாப்பு மசோதா, பாரதீய சாட்சியங்கள் மசோதா ஆகியவற்றை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தோம். அந்த மசோதாக்கள் நிறைவேறிய பிறகு, எந்த வழக்கும் 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது. அதன்மூலம் 70 சதவீத எதிர்மறையான பிரச்னைகள் நீக்கப்படும். அந்த சட்டங்களை அமல்படுத்த தேவையான போதிய உட்கட்டமைப்பு மற்றும் திறன்களை அனைத்து மாநிலங்களும் உருவாக்க வேண்டும். சமீபத்திய சந்திரயான்-3 திட்ட வெற்றிக்கு பிறகு இஸ்ரோ அமைப்பை ஒட்டுமொத்த உலகமும் பாராட்டி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளாக இந்திய விண்வெளி துறைக்கு புதிய திசையை காட்டியது மட்டுமின்றி 2030-ம் ஆண்டுக்குள் விண்வெளி துறையில் உலகின் முன்னணி நாடாக இந்தியாவை உயர்த்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்” என பேசினார்.
பிரச்சனைகள் தீர்வு:
முன்னதாக, கூட்டத்தில் மத்திய-மாநில அரசுகள் இடையிலான 17 பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அவற்றில் 9 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
3 மசோதாக்கள்:
மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, 3 புதிய குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால், இந்தியா என்ற வார்த்தையை அரசியலைப்புச் சட்டத்தில் இருந்து நீக்கி, பாரதிய என்ற வார்த்தையை சேர்க்க எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தொடர்ந்து அந்த மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அந்த மசோதாக்களை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதேநேரம், புதிய சட்டங்கள் மூலம் பாலியல் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும் எனவும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்படுகிறது.