காவல் நிலையங்கள் மனித உரிமைகள் மீறலின் கூடாரமாக உள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வேதனை தெரிவித்துள்ளார்.


டெல்லி விஞ்யான் பவனில் நேற்று தேசிய சட்ட சேவைகள் முகமையின் செயலி வெளியீட்டு விழா நடைபெற்றது. செயலியையும், முகமையின் அறிக்கையையும் வெளியிட்டுப் பேசிய நீதிபதி இதனைத் தெரிவித்தார்.


அவர் பேசியதாவது:


மனித உரிமைகளுக்கும், கைதானவர்களின் உடல் மாண்புக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் காவல் நிலையங்களில் நடைபெறுகிறது. இதில் யாருக்கும் விதிவிலக்கில்லை என்ற வகையில் அத்துமீறல்கள் நடைபெறுகின்றன. மூன்றாம் கட்ட காவல் துன்புறுத்தல் என்பது காவல் நிலையங்களில் மலிந்து கிடக்கின்றன. அரசியல் சாசனத்தில் மனித உரிமைகளைப் பேண வழிவகை இருந்தும் அதை மீறியும் காவல்நிலைய துன்புறுத்தல்கள் நடக்கின்றன.




காரணம் இதுதான்..


அரசியல் சாசன உறுதிகளையும் மீறி இத்தகைய கொடுமைகள் நடக்கக் காரணம் போதிய சட்டப் பாதுகாப்பு இன்மையே. ஒரு நபர் கைதாகும் முதல் சில மணி நேரங்கள் தான் மிக முக்கியமானவை. அந்த நேரம் தான் வழக்கின் போக்கை நிர்ணயிக்கிறது. அந்த நேரத்தில் போதியளவில் சட்டத் தலையீடு இருந்தால் துன்புறுத்தல் நிகழ வாய்ப்பில்லை. ஏழை, எளிய மக்களின் நம்பிக்கையை நீதித்துறை பெற வேண்டும். விளிம்புநிலை மக்களுக்காகவே நீதித்துறை இருக்கிறது என்பதை அவர்கள் உணரச் செய்ய வேண்டும். நீண்ட காலமாகவே விளிம்புநிலை மக்களின் நம்பிக்கைக்கு வெளியில் தான் நீதித்துறை நிற்கிறது. நீதியை நிலைநாட்ட நீண்ட கால காத்திருப்பு, நீதிமன்றங்கள் மேற்கொள்ளும் வாய்தா போன்ற நடவடிக்கைகளால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. வசதியும் அதிகாரமும் படைத்தோருக்கு நீதி துரிதமாகவும் ஏழை விளிம்புநிலை மக்களுக்கு தாமதமாகவும் நீதி கிடைக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வு களையப்பட வேண்டும். நம் நாட்டில் நிலவும் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் காரணமாக ஒருபோது நீதி தாமதப்படக் கூடாது என்பதை எப்போதும் நீதித்துறை கவனத்தில் கொள்ள வேண்டும். நமது கடந்த காலம் நம் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக இருக்கக் கூடாது.


இணையப் பிரிவிணை..


இணைய வசதிகள் மேம்பட்டிருந்தாலும் கூட அது நீதி கிடைப்பதை எளிதாகவோ அல்லது துரிதமாகவோ மாற்றவில்லை. இன்னமும் கூட கிராமப்புறங்களிலும் உள்ளடங்கிய பகுதிகளிலும் வசிப்போர் இணைய இணைப்பு இல்லாமல் வருந்துகின்றனர். நீதியை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது என்பது வெறும் கொள்கை முடிவாக மட்டுமே இருந்தால் போதாது. அதை சாத்தியப்படுத்த அரசாங்கத்தின் பல துறைகளுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும். இது தொடர்பாக நான் ஏற்கெனவே அரசாங்கத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். நாம், அனைவருக்கும் சமமான நீதி கிடைக்கும் எதிர்காலத்தை வசப்படுத்துவது நோக்கி முன்னேறுவோம்.  நீதியை நோக்கய நமது பயணம் முடிவற்றதாக இருந்து கொண்டே இருக்கிறது.


இவ்வாறு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசினார்.